ஒழித்துக்கட்டுவோம் காங்கிரஸ், திமுக.,வை: போட்டோஷாப் பதிவு

அரசியல் | Politics

‘’ஒழித்துக்கட்டுவோம் காங்கிரஸ், தி.மு.க.,வை,’’ என்று ஒரு புகைப்பட பதிவு சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தில் சந்தேகம் எழவே, இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு.

தகவலின் விவரம்:

ஒழீத்துகட்டுவோம் காங்கிரஸ் திமுக வை??

Archive link

சோனியா காந்தி, ராகுல் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை தகவல் என்ற செய்தி உள்ள அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஒருவர் நிற்கும் படத்துடன், ஒ(ழீ)ழித்துகட்டுவோம் காங்கிரஸ், தி.மு.க-வை என்று நிலைத்தகவல் வெளியிட்டுள்ளனர். மார்ச் 31ம் தேதி இரவு பதிவிடப்பட்டுள்ளது. இரண்டே நாளில், 1100-க்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி பற்றிய செய்தி என்பதாலும், தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று பதிவிட்டதாலும் எதிர்க்கட்சியினர் அதிக அளவில் இந்த படத்தை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

கடந்த ஜனவரி மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் மோடி வந்தார். அப்போது அவருக்கு தி.மு.க, ம.தி.மு.க சார்பில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோபேக் மோடி என்ற ஹேஷ் டேக்கில் பதிவுகளை வெளியிட்டனர். இது இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த பதிவில் உள்ள நபரின் படமும் அப்போது வைரல் ஆனது. இதனால், படத்தின் உண்மைத் தன்மையை சோதனை செய்ய படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஷ் தேடுதலில் தேடினோம். அப்போது, நமக்கு உண்மை படம் கிடைத்தது.

படத்தில் உள்ள நபர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். அவர் ‘மோடி ஒரு திருடன்’ என்று எழுதிய அட்டையைக் கழுத்தில் மாட்டியுள்ளார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. பலரும் இந்த படத்தை ஷேர் செய்திருந்தனர்.

Archive link

ஆனால், அந்த படத்தை போட்டோஷாப் பயன்படுத்தி மாறுதல் செய்துள்ளனர். மோடி ஒரு திருடன் என்ற வாக்கியம் இருந்த அட்டையின் மீது, சோனியா காந்தி, ராகுல் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு என்ற செய்தியை இணைத்து ஷேர் செய்துள்ளனர்.

அசல் படத்தில், அந்த நபர் சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருப்பார். அவர் பாக்கெட்  பகுதியில், கம்யூனிஸ்ட் கட்சி சின்ன அடையாளம், மிகத் தெளிவாகத் தெரியும்.

போட்டோஷாப் செய்யப்பட்ட படத்தில், சின்னம் மறைக்கப்பட்டிருக்கும். அட்டை தெளிவாகத் தெரியாது. அதற்கு பதில், செய்தித்தாளில் வெளியான செய்தி மட்டும் சரியாக அட்டையில் ஒட்டியது போல் இருக்கும்.

போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்க http://fotoforensics.com இணையத்தில் இரண்டு படங்களையும் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். அசல் படத்தில், வண்ண புள்ளிகள் இருக்கும். போட்டோஷாப் செய்யப்பட்ட படத்தில், முழுக்க முழுக்க கருப்பு புள்ளிகள் மட்டுமே இருப்பதைக் காணலாம்.

அரசியல் காரணங்களுக்காக மாற்று கட்சியினரின் புகைப்படத்தை எடுத்து, தங்களுக்கு ஏற்ற வகையில் போட்டோஷாப் செய்துவெளியிட்டது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு

உரிய ஆதாரங்களின்படி, இந்த படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்பது நிரூபிக்கப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:ஒழித்துக்கட்டுவோம் காங்கிரஸ், திமுக.,வை: போட்டோஷாப் பதிவு

Fact Check By: Praveen Kumar 

Result: False