ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என்று மோடி கூறினாரா!
ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கினோம் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
பிரதமர் மோடியின் பழைய புகைப்படம் மற்றும் சிறுவன் ஒருவனின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மோடி படத்துக்கு அருகே, "ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கியுள்ளோம் - மோடி" என்று உள்ளது. சிறுவன் மோடியிடம் கேள்வி கேட்பது போல், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதே 2 லட்சம் பேர்தானே, இதில் ஒரு கோடி பேருக்கு இலவச சிகிச்சையா?" என்று உள்ளது.
இந்த புகைப்பட பதிவை Abu Asma என்பவர் 2020 ஜூன் 7ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உலகம் முழுக்க 2020 ஜூன் 17ம் தேதி நிலவரப்படி 80 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவன அறிவிப்பு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 22 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 9 லட்சம் பேருக்கும், ரஷ்யாவில் 5.5 லட்சம் பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் ஜூன் 17ம் தேதி நிலவரப்படி 3.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1.8 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அப்படி இருக்கும்போது இந்தியாவில் ஒரு கோடி கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்தாகப் பிரதமர் கூறுவாரா என்ற கேள்வி எழுந்தது.
சில வாரங்களுக்கு முன்பு ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேருக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டதாக பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார். ஆனால், கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக ஏதும் கூறினாரா என்று தேடினோம்.
ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை - மோடி அறிவிப்பு என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பான செய்திகள் மட்டுமே கிடைத்தன.
பிரதமரின் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தபோது, மே 20ம் தேதி அவர் வெளியிட்ட ட்வீட் கிடைத்தது. அதில் "ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. இரண்டு ஆண்டுக்கும் குறைவான காலத்தில் மிக அதிக அளவில் மக்களின் உயிரை இந்த திட்டம் காப்பாற்றியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன். முழு உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக மோடியோ, பா.ஜ.க தலைவர்களோ, மாநில முதல்வர்களோ கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
இதன் அடிப்படையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று மோடி கூறியதைத் திரித்து, கொரோனா நோயாளிகள் ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என்று மோடி கூறினாரா!
Fact Check By: Chendur PandianResult: False