
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீகார் மாநில பா.ஜ.க பிரமுகருடன் உள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளார் பீலா ராஜேஷ் காவி நிற ஆடை அணிந்த நபர் ஒருவருடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “பீகார் பி.ஜே.பி நபருடன்… பீலா ராஜேஷ்… எப்படி கட்டமைப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த படத்தை Abdul Rahman என்பவர் 2020 ஏப்ரல் 9ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இந்த படத்தை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக சுகாதாரத் துறை செயலாளராக உள்ள பீலா ராஜேஷ் தொடர்பாக பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் உறவினர் என்றும், பா.ஜ.க ஆதரவாளர் என்றும் அதனால்தான் தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் என்று தவறான குற்றச்சாட்டை கூறி வருகிறார் என்றும் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், பீகார் மாநில பா.ஜ.க நிர்வாகியுடன் பீலா ராஜேஷ் உள்ளார் என்று குறிப்பிட்டு இந்த படத்தை பகிர்ந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தை தமிழ் ஊடகங்கள் சில வெளியிட்டிருந்தன. அதில், பீலாவின் கணவர் ராஜேஷ் என்றும், போலீஸ் அதிகாரி என்றும் அதில் குறிப்பிட்டிருந்தன. அந்த செய்திகளை தேடிக் கண்டறிந்தோம்.
விகடனில் பீலா ராஜேஷ் யார் என்று ஒரு கட்டுரையே வெளியிட்டிருந்தனர். அதில், சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ராணி வெங்கடேசனின் மகள் பீலா ராஜேஷ் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், பீலாவின் அப்பா எல்.என்.வெங்கடேசன் போலீஸ் டி.ஜி.பி-யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அந்த செய்தியில் பீலா ராஜேஷ், ராஜேஷ் தாஸ் தம்பதி என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தை வெளியிட்டிருந்தனர். இதே செய்தி மற்றும் படங்களை தினமலரிலும் ஏப்ரல் 6ம் தேதி வெளியிட்டிருந்தனர். மேலும் தங்கள் மகள்களுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டிருந்தனர்.

பீலா ராஜேஷுக்கும் பீகாருக்கும் என்ன தொடர்பு என்று தேடியபோது இதற்கான விடையும் அந்த செய்தியிலேயே கிடைத்தது. பீலா ராஜேஷ் பீகார் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. பீகார் மாநிலத்திலிருந்து ஜார்கண்ட் பிரிக்கப்பட்டபோது ஜார்கண்ட் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டார். அதன் பிறகு கணவர் தமிழகத்தில் பணிபுரிவதைக் கூறி, தமிழ்நாடு கேடருக்கு மாறுதல் பெற்று வந்தார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில், பீலா ராஜேஷ் தன்னுடைய கணவர் ராஜேஷ் தாசுடன் இருக்கும் படத்தை எடுத்து பீகார் பா.ஜ.க தலைவருடன் இருக்கிறார் என்று விஷமத்தனமான தகவலை சேர்த்து படத்தை உருவாக்கியிருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பீகார் பாஜக நபருடன் பீலா ராஜேஷ் என்று பகிரப்படும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
