
‘’ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வந்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வந்தார் #Google_CEO சுந்தர் பிச்சை ? ??
#சர்க்கார் மகிமையோ மகிமை ?ஒரு வாக்கின் முக்கியத்துவம் ☒ lol ??
ஏப்ரல் 18ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவில், ‘’ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வந்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை. #சர்க்கார் மகிமையோ மகிமை, ஒரு வாக்கின் முக்கியத்துவம்,’’ என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி, பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விஜய் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கிய படம் சர்கார். இந்த படம், கள்ள ஓட்டு போடுவதை தடுப்பது பற்றியும், விதிமுறை 49பி பற்றியும் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கும். இது, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என, படம் ரிலீசான போதே, தகவல் கூறப்பட்டது. இதுபற்றி இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த சூழலில்தான், சர்க்கார் படத்தை பார்த்ததன் விளைவாக, சுந்தர் பிச்சை ஓட்டுப் போட தமிழகம் வந்ததாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் சுந்தர் பிச்சை. ஒருவேளை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் சொல்லியிருப்பதுபோல, தமிழகத்திற்கு ஓட்டுப் போட வந்தாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், கூகுள் இணையதளம் சென்று, குறிப்பிட்ட புகைப்படத்தை பயன்படுத்தி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.
அப்போது, இந்த புகைப்படத்தின் உண்மை விவரம் கிடைத்தது. ஆம். இது பழைய புகைப்படம் என்றும், சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை எடுத்து, தற்போது தவறான தகவலுடன் பலரும் பகிர்ந்து வருகிறார்கள் என்றும் தெரியவந்தது.


இதன்படி, கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதியன்று, சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரில் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்வில் பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத்தான், தற்போது தமிழகத்திற்கு, அவர் ஓட்டுப் போட வந்ததாகக் கூறி, பலர் வதந்தி பரப்பி வருகிறார்கள் என சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.
Archived Link
சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரில் பங்கேற்ற முழு நிகழ்ச்சியின் வீடியோவை, கூகுள் இந்தியாவே தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
Archived Link
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. இதுதொடர்பாக, நியூஸ் 18 உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளன. இருந்தும், இப்படி வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஓட்டுப் போட தமிழகம் வந்தாரா?
Fact Check By: Parthiban SResult: False
