மராட்டியத்திலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் தடம் மாறி ஒடிஷா வந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ரயில் படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "மராட்டியத்திலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் தடம் மாறி ஒரிசா சென்று விட்டது. இந்த மாதிரி கூத்துலாம் எங்காவது நாம பார்த்திருப்போமா... டிஜிட்டல் இந்தியா ஹே" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, I Support Seeman NTK என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Waseem Muhammad என்பவர் 2020 மே 24ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்திய ரயில்வே டிஜிட்டல் மயம் ஆனது உண்மைதான். ரயில் எங்கே செல்கிறது என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரயில்வே நிர்வாகம் மட்டுமின்றி, பொது மக்களும் கூட ரயில் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை தங்கள் மொபைல் போன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அப்படி இருக்கும்போது ரயில் ஒன்று வழிதெரியாமல் செல்ல அனுமதிக்கப்படுமா, ரயில் நிலைய மேலாளர்கள் வழி தெரியாமல் வரும் ரயிலை அனுமதிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. அவ்வப்போது ரயிலில் சென்று வரும் பயணிகளுக்கே ரயில் பாதை எல்லாம் தெரியும்போது, ரயிலை ஓட்டுபவருக்கு வழிகள் தெரியாதா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்தன.

கூகுளில் வழிமாறி ஒடிஷா வந்த ரயில் என்று டைப் செய்து தேடியபோது இது தொடர்பான பல செய்திகள் நமக்கு கிடைத்தன. தி இந்துவில் வெளியான செய்தியில், மகாராஷ்டிராவில் இருந்து கோரக்பூர் செல்லும் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் ஒடிஷா மாநிலம் ரூர்கேலாவுக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், பயணம் செய்த பயணி ஒருவர், "இந்த ரயில் கோரக்பூர் செல்ல வேண்டியது. நான் கான்பூரில் இறங்க வேண்டும். ஆனால், இது எப்படி ஒடிஷாவுக்குள் நுழைந்தது என்று தெரியவில்லை. நாங்கள் எப்போது சொந்த ஊர் சென்று சேருவோம் என்றும் தெரியவில்லை" என்றார்.

thehindu.comArchived Link

இது குறித்து தென் கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சஞ்சய் கோஷ் கூறுகையில், "மும்பை - கோரக்பூர் இடையேயான பிரதான ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே, இந்த ரயில் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட மாற்றுப் பாதையில் பயணிக்கிறது.

இதற்காக பயணிகள் கவலைப்பட வேண்டாம். பயணிகளுக்கு வேண்டிய உணவு வழங்கும்படி எல்லா ரயில்வே மண்டல மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்த பாதையில் செல்லும் ரயில்களின் எண்ணிக்கை 100க்கு மேல் உள்ளது. பெரும்பாலான ரயில்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்துக்கே இயக்கப்படுகின்றன. இதனால், மாற்றுப்பாதையில் ரயில் இயக்கப்படுகிறது" என்று கூறினார் என குறிப்பிட்டிருந்தனர்.

indiatoday.inArchived Link

தொடர்ந்து தேடியபோது இந்தியா டுடே வெளியட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், பயணி ஒருவர் வெளியிட்ட பதிவு அடிப்படையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் ரயில் வழிதவறி ஒடிஷா சென்றுள்ளது என்று பதிவிட்டதாகவும், உடனடியாக இதற்கு ரயில்வே தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் பேட்டியை இதில் வெளியிட்டிருந்தனர். அதில், "கோரக்பூர் செல்லும் சரியான பாதையில் இந்த ரயில் பயணித்திருந்தால் இன்னும் காலதாமதம் ஆகியிருக்கும். அதிக நேர காத்திருப்பைத் தவிர்க்க மாற்றுப் பாதையில் ரயில் இயக்கப்பட்டது. ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

தொழிலாளர் சிறப்பு ரயில்களில் 80 சதவிகிதம் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கு இயக்கப்படுகின்றன. அதனால்தான் ரயில் பாதை பயன்பாட்டில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் மாற்றுப் பாதையில் ரயிலை இயக்கினால்தான் ஓரளவுக்கு வேகமாக சென்று சேர முடியும். எந்த ரயில் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்கின்றனர். ஒவ்வொரு ரயிலையும் அவர்கள் கண்காணிக்கின்றனர்" என்றார்.

மும்பையில் இருந்து கோரக்பூர் நோக்கி புறப்பட்ட ரயில், வழக்கமான பாதையில் செல்லாமல் ஒடிஷா மாநிலம் ரூர்கேலா வந்தது உண்மைதான். ஆனால், ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதற்காக, ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் உண்மையும் தவறான தகவலும் சேர்த்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான வீடியோவுடன் தவறான தகவலை சேர்த்து வெளியிட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Partly False