
ஏழு லட்சம் மாநிலங்கள் உள்ளது என்று எச்.ராஜா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
எச்.ராஜா வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்துள்ளனர். அதில், “சில தகவல்கள், ரேப்பிட் டெஸ்ட் கிட் 7 லட்சம் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு 1 லட்சம். இதன் மூலம் ஒருவருக்கு ரத்தப் பரிசோதனையின் முடிவு 20-30 நிமிடங்களில் கிடைத்துவிடும். விரைவில் அனைத்து மக்களுக்கும் சோதனை என்கிற நிலைக்கு பயணிக்க முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “8000 கோடி மக்கள் இருக்கும்போது, 7 லட்சம் மாநிலங்கள் இருக்கக் கூடாதா?” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை,
Sasibala என்பவர் 2020 ஏப்ரல் 10ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரபல கல்வி நிறுவனம் ஒன்றின் தாளாளர் சமீபத்தில் 8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடி நிதி உதவி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், எச்.ராஜா ஏழு லட்சம் மாநிலங்கள் உள்ளது என்று கூறினார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த பதிவில் தவறு ஒன்றும் இல்லை, ஏழு லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கிட் என்று அடிக்க நினைத்து ரேப்பிட் டெஸ்ட் கிட் ஏழு லட்சம் என்று அடித்திருப்பது தெரிகிறது. ரேப்பிட் டெஸ்ட் கிட் இந்தியாவுக்கு ஏப்ரல் 15ம் தேதிதான் வரும் என்று ஐ.சி.எம்.ஆர் கூறியிருந்த நிலையில் எச்.ராஜா பெயரில் தவறான ட்வீட் பதிவை உருவாக்கி ஷேர் செய்திருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
உண்மையில் இந்த பதிவை எச்.ராஜா வெளியிட்டாரா என்று ஆய்வு செய்தோம். ஏப்ரல் 10ம் தேதி இந்த பதிவை எச்.ராஜா வெளியிட்டிருப்பது தெரியவந்தது. அவர் வெளியிட்ட பதிவு சரியா, தவறா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.
ஏழு லட்சம் மாநிலம் என்று எச்.ராஜா கூறியதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரபுவது குறித்து தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த மூத்த ஊடக நிர்வாகியிடம் இது குறித்துக் கேட்டோம்.
அதற்கு அவர், “ஏழு லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கிட் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று எச்.ராஜா கூறியதை எல்லாம் ஏழு லட்சம் மாநிலங்கள் என்று விஷமத்தனமாக ஷேர் செய்தால் என்ன செய்வது?” என்று கூறினார்.
நம்முடைய ஆய்வில், இந்த பதிவு எச்.ராஜா வெளியிட்டது உறுதியாகி உள்ளது. ஏழு லட்சம் பரிசோதனை கிட் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது என்ற அர்த்தத்தில் அவர் வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஏழு லட்சம் மாநிலங்கள் உள்ளது என்று எச்.ராஜா கூறியதாக தவறான தகவலும் சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்தியாவில் 7 லட்சம் மாநிலங்கள் உள்ளது என்று எச்.ராஜா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
