கொரோனாவுக்கு பலியான இத்தாலி மருத்துவ ஜோடி இவர்களா?

Coronavirus சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

இத்தாலியில் கொரோனாவுக்கு பலியான மருத்துவ தம்பதியர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

காதல் ஜோடி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தப்பதிவு உலுக்குகிறது.. இவர்கள் இருவரும் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர்கள்.இருவரும் தம்பதியர்கள். பல நாட்களாக கொரோனோ தொற்றாளர்களுக்கு மருத்துவம் பார்த்து இரவு பகலாக 134 பேரை குணப்படுத்தியிருக்கிறார்கள்.ஆனால் இவர்களிருவருக்கும் கொரோனோ நோய் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் அவர்களிருவரின் நிலையும் கவலைக்கிடமாகியுள்ளது. இறுதி தருவாயிலிருந்த அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள விரும்பினர்.மருத்துவமனை நிர்வாகமும் இருவருக்கும் கொரோனோ தொற்றுள்ள படியால் மருத்துவமனை ஓய்வறையில் சந்தித்துக் கொள்ள அனுமதித்தது.

அவர்களிருவரும் சந்தித்துக் கொண்ட ஒரு மணி நேரத்தில் இருவரின் உயிரும் பிரிந்திருக்கிறது. மருத்துவர்களான கணவன் மனைவி இருவரையும் கொரோனோ இவ்வாறு உயிர் பறித்திருக்கிறது. நம்மை வீட்டிலிருங்கள் என்று சொல்வதும், ஏனையோருடன் தொடர்புகளை தவிருங்கள் என்று சொல்வதும், விளையாட்டாய் தெரியலாம் தன் அன்புக்குரிய ஒருவர் பாதிக்கப்படும் வரை. – Zainul Abideen -” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Brindha Kasi என்பவர் 2020 மார்ச் 25ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா பாதிப்பு காரணமாக யாரும் வீட்டைவிட்டு வர வேண்டாம் என்று நல்ல தகவலை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், படத்தில் இருப்பவர்கள் இத்தாலியில் உள்ள மருத்துவர்கள் என்றும் அதுவும் இறக்கும் தருவாயில் உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Search linknbcnews.comArchived Link

இவர்கள் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர்கள்தானா, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த படத்தை nbcnews.com என்ற ஊடகம் பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. 2020 மார்ச் 12ம் தேதி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா விமான நிலையத்தில் தம்பதியினர் முத்தம் அளித்துக்கொண்டனர் என்று குறிப்பிட்டிருந்தனர். அதில் இந்த புகைப்படம் ஏ.பி என்ற ஊடக நிறுவனம் வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் ஏ.பி இணையதளத்தில் சென்று தேடினோம். அப்போது இந்த படத்தை ஏ.பி ஊடக நிறுவனம் வெளியிட்டிருப்பது தெரிந்தது. 

apimages.comArchived Link

இதன் மூலம் ஸ்பெயினின் பார்சிலோனா விமானநிலையத்தில் பெயர் தெரியாத ஒரு ஜோடி முத்தமிட்டுக்கொண்ட படத்தை எடுத்து அவர்கள் மருத்துவர்கள் என்றும் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளித்ததில் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் கதை உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதியானது.

இதன் அடிப்படையில், இத்தாலியில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கொரோனாவுக்கு பலியான இத்தாலி மருத்துவ ஜோடி இவர்களா?

Fact Check By: Chendur Pandian 

Result: False