
‘’திமுக.,வினர் பாகிஸ்தான் வர விசா தேவையில்லை,’’ என்று இம்ரான் கான் சொன்னதாகக் கூறி வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Ponni Ravi என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை பயன்படுத்தி, அதன் மேலே, இம்ரான் கான் அதிரடி அறிவிப்பு. தமிழ்நாட்டை சேர்ந்த திமுக கட்சியினர் இனி எந்த விசா நடைமுறையும் இன்றி பாகிஸ்தான் வந்து செல்ல அனுமதி, என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்கின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றி, சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது தொடர்பாக, இந்தியா முழுவதும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கலந்து காணப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தை முன் அறிவிப்பு இன்றி செயல்படுத்தியது தவறு எனக் கூறி, திமுக சார்பாக, டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் பங்கேற்று, மத்திய அரசின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தனர். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஆனால், இவர்கள் சொல்வது போல எந்த செய்தியும் நியூஸ் 7 வெளியிடவில்லை. அதேசமயம், இம்ரான் கான் பற்றி சமீப நாட்களில் நியூஸ் 7 வெளியிட்ட மற்ற சில செய்திகளின் லிங்க் கிடைத்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அத்துடன் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் வெளியிடப்பட்டுள்ள நியூஸ் கார்டு மார்ஃபிங் செய்யப்பட்டதாகும். அதில் உள்ள ஃபான்ட், மொழி நடை இதனை தெளிவாக எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
இதே நியூஸ் கார்டை fotoforensics இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அப்போது இது மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்றுதான் என தெளிவாக விவரம் கிடைத்தது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேலே உள்ள நியூஸ் கார்டு மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்றுதான் என தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி போலியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திமுக.,வினர் பாகிஸ்தான் வர விசா தேவையில்லை என்று இம்ரான் கான் அறிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
