புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியவர் மோடி: பிரேமலதா பேச்சால் சர்ச்சை

அரசியல் சமூக வலைதளம்

‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக, ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வேகமாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்றுள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

பதிவின் விவரம்:
இந்த லட்சணத்துல மூதேவி..
இதெல்லாம் அரசியல் பண்ணுது

Archive Link

இப்பதிவில், ஒரு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ என்று பிரேமலதா பேசியதாகக் கூறியுள்ளனர். அதேபோல, மீமின் கீழே, ‘’நடுத்தெருவுல இருந்த உங்களுக்கு.. நாலு சீட்டு வாங்கி கொடுத்ததுக்கு.. நல்ல மரியாதை செய்றீங்கம்மா..!,’’ என்று மோடி சொல்வது போலவும், பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், முன்பு போல அவரால், ஆக்ரோஷமாக, கட்சிப் பணிகளில் ஈடுபட முடியவில்லை. இந்நிலையில், அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, தேர்தல் பிரசாரப் பணிகளை முன்னின்று மேற்கொண்டு வருகிறார். தற்போது, பாஜக- அஇஅதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கட்சிக்கு, 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேமுதிக வேட்பாளர்களையும், தனது கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து, தமிழகம் முழுக்க, பிரேமலதா பிரசாரம் செய்து வருகிறார். இதன்போது, புல்வாமா தாக்குதல் பற்றி அவர்
ஏதேனும் பேசியிருக்க வாய்ப்புள்ளது. அதை இவர்கள், தவறாக சித்தரித்து, இந்த பதிவை பகிர்ந்துள்ளனரா என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, பிரேமலதா, புல்வாமா தாக்குதல், பிரதமர் மோடி என கூகுளில் டைப் செய்து தேடினோம். எடுத்த எடுப்பிலேயே ஏராளமான செய்தி ஆதாரங்கள் வந்து குவிந்தன. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மார்ச் 28, 29 தேதிகளில், பிரேமலதா பற்றிய செய்திகள் பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. இதில், தினமணி இணைய தளத்தில் வெளியான செய்தியை கிளிக் செய்து பார்த்தோம். அந்த செய்தியில், ‘’கடந்த மார்ச்28ம் தேதியன்று கோவை கணபதி பகுதியில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக, பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது, அவர், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தவர் மோடி என்று கூறுவதற்குப் பதிலாக, புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி, என்று உளறினார். மேலும், சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முரசு சின்னத்தில் ஆதரியுங்கள் என்று உளறிவிட்டு, பின்னர், தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்,’’ எனப் பேசியதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சுதான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது என்று, உறுதி செய்யப்படுகிறது. இதுபற்றி தினமணியில் வெளியான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதேபோல, நியூஸ்18 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

முடிவு:

மேற்கண்ட ஆதாரங்களின்படி, குறிப்பிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதுபோல, பிரேமலதா விஜயகாந்த் பேசியது உண்மைதான் என உறுதி செய்யப்படுகிறது. மேலும், அவர் கவனக்குறைவாக இவ்வாறு உளறியதாகவும் நமது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Avatar

Title:புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியவர் மோடி: பிரேமலதா பேச்சால் சர்ச்சை

Fact Check By: Parthiban S 

Result: True