
‘’மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தருவதை நிறுத்துவேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
சித்தார்த் ஜி
எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் பற்றி சத்தியம்டிவி வெளியிட்ட செய்தி எனக் கூறி ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழங்கப்படும் இலவச லட்டு வழங்கும் திட்டத்தை நிறுத்துவோம்,’’ என்று ஸ்டாலின் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி ஒரு புறம் உண்மையை போலவே இருந்தாலும், மறுபுறம் இப்படி எல்லாமா ஒரு அரசியல் கட்சித் தலைவர் பேசுவார் என்று சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆனாலும், எந்த யோசனையும் இன்றி பலர் இதனை உண்மை என நம்பி பகிர்வதால், நாம் இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்தோம்.
இதன்படி, சத்தியம் டிவி அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடினோம். அப்போது நவம்பர் 10ம் தேதியிட்டு வெளியிட்டிருந்த உண்மையான நியூஸ் கார்டு விவரம் கிடைத்தது.
Sathiyam TV Facebook Link | Archived Link |
இதன்படி, நவம்பர் 10ம் தேதி அன்று திமுக பொதுக்குழு கூடியுள்ளது. அதில், மு.க.ஸ்டாலினுக்கு கட்சிக்குள் கூடுதல் அதிகாரம் தருவதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றிய செய்தியை சத்தியம் டிவி வெளியிட, அதனை சிலர் அரசியல் உள்நோக்கத்திற்காக, தவறான கருத்தை சித்தரித்து போலி நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளனர் என தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தருவதை நிறுத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
