
மோடி ஒழிக என்று சொல்பவர்களுக்கு லெக்பீஸ் இலவசம் என்று கடைக்காரர் ஒருவர் அறிவித்துள்ளதாக விகடனில் செய்தி வெளியாகி இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஏ.என்.ஐ செய்தி ஊடகம் வெளியிட்ட புகைப்படத்துடன் விகடன் வெளியிட்ட செய்தி என்று ஒரு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “மோடி ஒழிக”ன்னு சொல்கிறவர்களுக்கு லெக்பீஸ் இலவசமாம்! அசத்தும் கடைக்காரர்!! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “எந்த அளவுக்கு கஷ்ட்டபட்டிருந்த இந்த மனுசன் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Natarajan Seetharaman என்பவர் 2021 பிப்ரவரி 22ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியப் பிரதமரை ஒழிக என்று சொல்லும்படி பொது வெளியில் அறிவிப்பு வெளியிடுவார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பதிவை ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் மற்றும் செய்தி 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் சமயத்தில் வெளியான என்று தெரிந்தது. அதில், பாகிஸ்தான் ஒழிக என்று கோஷம் எழுப்பினால் சிக்கன் லெக் பீசுக்கு ரூ.10 தள்ளுபடி என்று கடைக்காரர் அறிவித்தார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: financialexpress.com I Archive 1 I sathiyam.tv I Archive 2
இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடியபோது, 2019ம் ஆண்டு தமிழிலும் இந்த செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. விகடனில் வெளியான செய்தியைத் தேடினோம். 2019 பிப்ரவரி 21ம் தேதி விகடனில் இந்த புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. அதிலும் “`பாகிஸ்தான் ஒழிகன்னு சொன்னா லெக் பீஸ் தள்ளுபடி!’- தள்ளுவண்டி கடைக்காரரின் நூதன அறிவிப்பு” என்று குறிப்பிட்டிருந்தனர்.
செய்தியில், “சத்தீஸ்கர் மாநிலம் ஜெக்தல்பூரில் உள்ள தள்ளுவண்டிக்கடை உரிமையாளர் நூதன தள்ளுபடி ஒன்றை அறிவித்துள்ளார். புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த தினம் இந்த ஆண்டின் மறக்கமுடியாத நாளாக உருவெடுத்துள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் மண்ணில் விதைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ஜெக்தல்பூரில் தள்ளுவண்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார் அன்ஜல் சிங். இவர் தன்னுடைய தள்ளுவண்டிக் கடைக்கு முன்புறம் தள்ளுபடி அறிவிப்பு ஒன்றை ஒட்டியுள்ளார். இந்த நூதனமான அறிவிப்பு பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. `பாகிஸ்தான் ஒழிக!’ என முழக்கமிடுபவர்களுக்கு சிக்கன் லெக் பீஸில் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்’ என்பதே அந்த அறிவிப்பு.

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive
இது தொடர்பாக அன்ஜல் சிங் பேசுகையில், `பாகிஸ்தான் ஒருபோதும் மனிதநேயத்தை மதித்ததேயில்லை. எதிர்காலத்திலும் அதை உணரப்போவதில்லை. இதன் காரணமாக எல்லோரும் தங்கள் இதயத்திலிருந்து, `பாகிஸ்தான் ஒழிக!’ என்று கூற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஆய்வில், புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் ஒழிக என்று கோஷம் எழுப்பினால் சிக்கன் விலையில் தள்ளுபடி என்று வியாபாரி ஒருவர் அறிவித்த செய்தியை மாற்றி, மோடி ஒழிக என்று கோஷம் எழுப்பினால் சிக்கன் லெக் பீஸ் இலவசம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாகிஸ்தான் ஒழிக என்று கோஷம் எழுப்ப வேண்டும் என்று கடைக்காரர் கூறியதை மோடி ஒழிக என்று கூறியதாக மாற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மோடி ஒழிக என்று கூறினால் சிக்கன் லெக்பீஸ் இலவசம் என்று அறிவித்த வியாபாரி?- உண்மை என்ன?
Fact Check By: Chendur PandianResult: False
