சுய ஊரடங்கின் போது, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டும் நிகழ்வில் மக்கள் நடந்துகொண்டது இந்திய வரலாற்றில் முட்டாள்தனமான தருணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

யுனெஸ்கோ வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழியாக்கத்தை மேலே வைத்துப் பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், "சுய ஊரடங்கின் போது கை தட்டும்படி சொன்ன சமயத்தில் மக்கள் நடந்துகொண்ட விதம் தான் இந்திய வரலாற்றிலேயே படுமுட்டாள்தனமான தருணம் என்பதை அறிவிக்கிறோம்" என்று உள்ளது.

இந்த பதிவை, இந்து முஸ்லிம் சகோதரத்துவம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 23ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சுய ஊரடங்கின் போது நாட்டின் சில பகுதிகளில் மக்கள் வெற்றிப் பேரணி போல ஒன்று கூடி கொண்டாடியது வருத்தத்தை அளிக்கிறது. ஒரு சில இடங்களில் நடந்ததை வைத்து நாடு முழுக்க நடந்தது போன்று பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அது சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் செல்லவில்லை. இந்திய வரலாற்றில் படுமுட்டாள்தனமான தருணம் என்று யுனோஸ்கோ ட்வீட் வெளியிட்டதா என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம்.

2020 மார்ச் 22 மாலை 5.20-க்கு இந்த பதிவை யுனெஸ்கோ வெளியிட்டது போன்று ஸ்கிரீன் ஷாட்டில் உள்ளது. எனவே, மார்ச் 22ம் தேதி உண்மையில் இந்த பதிவை யுனெஸ்கோ வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம். யுனெஸ்கோ பக்கத்தில் 22ம் தேதி இந்தியாவை விமர்சித்து எந்த பதிவும் வெளியாகவில்லை.

தண்ணீர் உரிமை தொடர்பாக மாலை 5.19க்கு ஒரு ட்வீட்டை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. அதன்பிறகு ஐ.நா-வின் பல்வேறு அமைப்புகள் வெளியிட்ட பதிவுகளை ரீட்வீட் செய்துள்ளது. இரவு 7.36க்கு தண்ணீர் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பாக பதிவிட்டுள்ளது. இந்தியாவை விமர்சித்து எந்த பதிவும் வெளியாகவில்லை.

twitter.comArchived Link 1
twitter.comArchived Link 2

இந்தியாவை விமர்சித்து யுனெஸ்கோ ட்வீட் பதிவிட்டிருந்தால், அதை நீக்கியிருந்தால் அது தொடர்பான செய்தியாவது வெளியாகி இருக்கும். இந்தியாவை விமர்சித்து யுனெஸ்கோ ட்வீட் செய்ததா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

Search Link

நம்முடைய ஆய்வில்,

இந்தியாவை விமர்சித்து யுனெஸ்கோ வெளியிட்ட ட்விட், அதன் ட்விட்டர் பக்கத்திலேயே இல்லை.

இந்தியாவை விமர்சித்து யுனெஸ்கோ ட்விட் செய்தது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்திய வரலாற்றில் படுமுட்டாள்தனமான தருணம் என்று யுனெஸ்கோ அறிவித்தது என்று பகிரப்படும் ட்வீட் போலியானது என்ற உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்தியாவின் முட்டாள்தனம் என்று அறிவித்ததா யுனெஸ்கோ? உண்மை அறிவோம்!

Fact Check By: Chendur Pandian

Result: False