
தேனி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3 லட்சம் ஓட்டுகள் மாயமாகி விட்டதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தமிழ் நாளிதழ் ஒன்றில் தேர்தல் முன்னிலை – வெற்றி நிலவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தேனி நாடாளுமன்றத் தொகுதி வாக்குகளின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் ஐந்து இடங்களுக்கு வந்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை மட்டும் கூட்டி 8 லட்சம் வாக்குகள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்த வாக்குகளில் இருந்து 8 லட்சம் வாக்குகளை கழித்து, மீதி 3.47 லட்சம் வாக்குகள் என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது வெற்றியா, முன்னிலை விவரமா என்று எதுவும் இல்லை. சாமானியனின் ஒரு கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எஸ்கேஎஸ் மீடியா என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 மே 24ம் தேதி இதை வெளியிட்டுள்ளது. பார்க்க நம்பத்தகுந்தது போல் உள்ளதால் இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு சில தொகுதிக்கு 23ம் தேதி மாலையே வெளியானது. சில தொகுதிகளுக்கு 25ம் தேதி காலை வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. இதனால், பல நாளிதழ்கள் நாடாளுமன்றத் தொகுதி நிலவரம் தொடர்பான செய்தியை வெற்றி, முன்னிலை என்று குறிப்பிட்டு வெளியிட்டன.
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான முடிவு மே 24ம் தேதி காலைதான் வெளியிடப்பட்டது. இதனால், காலை நாளிதழ்களில் தேனி நாடாளுமன்றத் தொகுதி பற்றி குறிப்பிடுகையில் முன்னிலை என்றே குறிப்பிட்டன.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் எந்த பத்திரிகையில் இது வெளியாகி உள்ளது என்ற தகவல் இல்லை. முன்னணி நாளிதழ்களில் இது போல் வந்துள்ளதா என்று பார்த்தோம். எதிலும் இப்படி இல்லை. தினமணியில் வெளியான பட்டியல் படம் கீழே…

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய தள பக்கம் சென்று தேனி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை விவரங்களை எடுத்தோம். அதில், போட்டியிட்ட 30 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுக்கு எவ்வளவு வாக்குப்பதிவானது என்று தெளிவாக இருந்தது.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டது போன்று ரவிந்திரநாத் குமார் 3,66,368 வாக்குகளை வாங்கவில்லை. உண்மையில், அவர் பெற்ற வாக்குகள் 5,04,813. அதேபோல், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்ற வாக்குகள் 4,28,120. அந்த தொகுதியில் நோட்டாவுக்கு 10,684 வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தமாக, 11,67,919 வாக்குகள் பதிவாகி உள்ளது. தபால் ஓட்டுக்கள் 5,570. இந்த இரண்டையும் சேர்த்தால், 11,73,489 வாக்குகள் பதிவாகி உள்ளது.

இப்படி, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகள் துல்லியமாக உள்ளது.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், முன்னிலை நிலவரத்தை எடுத்து, அதில் முதல் 5 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மட்டும் கூட்டப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த தொகுதியில் சிலர், 4000 வாக்குகளை பெற்றுள்ளனர். நோட்டா 10 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. இவற்றை எல்லாம் சேர்க்காமல், வெறும் ஐந்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை மட்டும் கொண்டு கணக்குபோட்டு, 3 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் காணவில்லை என்று மக்களை குழப்பம் அடைய செய்துள்ளனர்.
நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், தேனி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் குழப்பத்தை போக்கும் வகையில் உள்ளது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தேனி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3 லட்சம் வாக்குகள் விடுபட்டதா? – புதிய கணக்கால் பரபரப்பு!
Fact Check By: Praveen KumarResult: False
