
கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி பறப்பதாக ஒரு செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றி உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தினோம்.
தகவலின் விவரம்:
வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி
வாழ்க உம் நாட்டப்பற்று
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்று எச்.வசந்தகுமார் வாக்கு கேட்கும் படத்தை வெளியிட்டு, அதில். ‘’வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி… வாழ்க உன் நாட்டுப்பற்று,’’ என்று நிலைத்தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில், பச்சை நிற பின்னணியில், வெள்ளை நிறத்தில் பிறை நட்சத்திரம் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று உள்ளது. அதை வட்டமிட்டு காட்டியுள்ளனர்.
தேர்தல் நேரம் என்பதாலும் பா.ஜ.க ஆதரவு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலை உள்ளவர்களால் இந்த தகவல் அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
சமீபத்தில், வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி வந்தார். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் தங்கள் கட்சிக் கொடியுடன் வந்தனர். அதை பாகிஸ்தான் கொடி என்று எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்தனர். அது பொய் என்று நிரூபிக்கப்பட்டது. இது தொடர்பாக நாம் ஏற்கனவே உண்மை கண்டறிந்து வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியை மேற்கோள் காட்டித்தான், பாகிஸ்தான் கொடி என்று எச்.வசந்தகுமார் பற்றிய இந்த பதிவிலும் தவறாக தெரிவித்துள்ளார். இதை நிரூபிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி மற்றும் பாகிஸ்தான் தேசியக் கொடியை கூகுளில் தேடினோம். எச்.வசந்தகுமார் வாகனத்தில் இருப்பதாக கூறப்பட்ட கொடியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியும் ஒன்றாக இருந்தது உறுதியானது.

(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி முழுவதும் பச்சை நிறத்தில் உள்ளது. அதில், வெள்ளை நிறத்தில் பிறை மற்றும் நட்சத்திரம் சின்னம் இருந்தது.
(பாகிஸ்தான் தேசியக் கொடி)


பாகிஸ்தானின் கொடியில், வெள்ளை நிறத்தில் செங்குத்தான பட்டையைத் தொடர்ந்துதான் பச்சை நிறக்கொடியும், அதில் பிறை நட்சத்திரம் சின்னமும் உள்ளது. அதிலும் பிறை மற்றும் நட்சத்திர சின்னம் அளவில் பெரியதாகவும் இருந்தது.

இந்த ஒப்பீட்டின் மூலமே எச்.வசந்தகுமார் வாகனத்தில் இருந்தது பாகிஸ்தான் கொடி இல்லை என்பது உறுதியானது.
இந்த தகவலை பரப்பிய குமரியில் மீண்டும் தாமரை பின்னணியை ஆய்வு செய்தோம். குமரியில் மீண்டும் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற வேண்டும் என, இந்த ஃபேஸ்புக் பக்கம் செயல்படுவது தெரிந்தது. காங்கிரஸ், தி.மு.க எதிர்ப்பு செய்திகளைத் தொடர்ந்து பரப்பி வருவதும் புரிந்தது.
ஒரு பதிவில், சென்னையில் பணியாற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ நிர்வாகிகள் வாக்குப்பதிவு அன்று சொந்த ஊர் திரும்ப இலவச வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, வெளிப்படையாகக் கூறப்பட்டிருந்தது. இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்பது தெரிந்தும் வெளிப்படையாக பதிவிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாம் நடத்திய ஆய்வின்படி நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்:
1) காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக் கொடியைப் பாகிஸ்தான் கொடி என்று சிலர் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர்.
2) பாகிஸ்தான் கொடிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக் கொடிக்கும் உள்ள வேறுபாடு.
3) எச்.வசந்தகுமார் வாகனத்தில் இருந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக் கொடி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
4) வதந்தியை பரப்பியவரின் பின்னணி கண்டறியப்பட்டுள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
