‘’70 வயதான ஈவேராவை, 16 வயதான மணியம்மை திருமணம் செய்துகொண்டதுதான் எச்ச திராவிட வரலாறு,’’ என்ற ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளதோடு, டிரெண்டிங் ஆகியும் வருகிறது. பெரியார் – மணியம்மை திருமணம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருவதால், இந்த ஃபேஸ்புக் பதிவு உண்மையா, பொய்யா என, விரிவாக ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதன் முடிவுகளை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

வதந்தியின் விவரம்:
ஈவேராக்கு வயது 70

மணியம்மைக்கு 16

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதை நியாயம் படுத்தியது தான் எச்ச

#திராவிட வரலாறு

Archive Link

உண்மை அறிவோம்:
பெரியார் – மணியம்மை திருமண சர்ச்சை, பெரியார் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்வு, தேர்தல் காலம் என்பதால், திராவிட கட்சிகள் மீது உள்ள எதிர்ப்பு மனநிலை போன்றவை காரணமாக, இந்த பதிவை மேற்கொண்ட நபர் பகிர்ந்துள்ளதாக, அவர் எழுதிய எழுத்துகளில் இருந்தே தெரியவருகிறது. முதலில், இந்த பதிவில் கூறப்படுவதுபோல, 70 வயதான பெரியார் 16 வயது சிறுமியான மணியம்மையை திருமணம் செய்யவில்லை.

உண்மையில், அப்போது, மணியம்மையின் வயது 30க்கும் மேல். கடந்த 1920ம் ஆண்டு, மார்ச் 10ம் தேதி பிறந்த மணியம்மை, பெரியாரின் ஆசிபெற்ற தொண்டர்களில் முதன்மையானவர். தனது பெற்றோரால், உரிய அனுமதியுடன் பெரியாரின் உதவியாளராக பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டவர்தான் மணியம்மை.

அரசியல் காரணங்களுக்காகவும், மனைவி, வாரிசுகள் யாரும் இன்றி முதுமையில் வாடும் தன்னை பராமரிக்கவும் வேண்டியே மணியம்மையை, பெரியார் திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் 1949ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி நடைபெற்றது. அப்போது, மணியம்மைக்கு வயது 30ஐ கடந்துவிட்டது. இதன்பின், பெரியார் 1973ம் ஆண்டில் மறைந்துவிட, அவருக்குப் பின், திராவிடர் கழகத்தின் தலைவியாக மணியம்மை செயல்பட்டு வந்தார். 1978ம் ஆண்டு, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இவரது வாழ்க்கை வரலாறு பற்றி திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான விடுதலை வெளியிட்ட கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மணியம்மையின் வாழ்க்கை வரலாறு பற்றிய விக்கிப்பீடியா தமிழ் கட்டுரை விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

நிற்க! மேற்கண்ட பதிவில் கூறப்படுவது போல, பெரியாரை திருமணம் செய்யும்போது, மணியம்மையின் வயது 16 இல்லை என்பது இதன்மூலமாகவே தெளிவாகிறது. இது தவிர, அந்த பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பவர் முதலில் மணியம்மையே இல்லை. ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இந்த பதிவில் கூறப்படுவது போல, மணியம்மையின் வயது மற்றும் புகைப்படம் இரண்டுமே தவறாகும். சரி, இப்புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் என கண்டறிய முடிவு செய்தோம். இதன்படி, #Yandex இணையதளத்தில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், குறிப்பிட்ட பெண் யார் என்ற புகைப்பட ஆதாரம் கிடைத்தது. இதில், சம்பந்தப்பட்ட பெண், பெரியாரால் சுயமரியாதை திருமணம் செய்துவைக்கப்பட்டவர் என்றும், அவரது கணவர் உள்ளிட்டோர் இதில் உள்ளதும் தெரியவருகிறது. இதுதவிர, இந்த புகைப்படத்தில், திமுக நிறுவனர் அண்ணா, திராவிடர் கழகத்தின் இந்நாள் தலைவர் கி.வீரமணி போன்றோரும் உள்ளதை காண முடிகிறது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதுதவிர, சம்பந்தப்பட்ட நபரின் ஃபேஸ்புக் பக்கம் சென்றுபார்த்தால், பாஜக ஆதரவு, முஸ்லீம் மற்றும் பெரியார் எதிர்ப்பு பதிவுகள் பலவற்றை பார்க்க முடிகிறது. எனவே, அரசியல் காழ்ப்புணர்வின் பேரில், அவர் இந்த சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது உறுதியாகிறது.

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) பெரியாரை திருமணம் செய்யும்போது, மணியம்மையின் வயது 30-க்கும் மேல்.
2) குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் இருக்கும் நபர் மணியம்மையே அல்ல. உண்மையான மணியம்மையின் புகைப்படம் இது அல்ல.
3) இந்த புகைப்படம் பெரியார் நடத்திவைத்த சுயமரியாதை திருமணம் ஒன்றின்போது எடுக்கப்பட்டது.
4) பெரியாரிய எதிர்ப்பாளர்களால் இப்படி தவறான புகைப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவும், அதில் உள்ள புகைப்படமும் தவறானவை என்று உறுதியாகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:பெரியாரை திருமணம் செய்யும்போது மணியம்மைக்கு 16 வயதா?

Fact Check By: Parthiban S

Result: False