பாகிஸ்தான் பிரதமருடன் ராகுல் காந்தி மற்றும் மம்தா இருக்கும் படம் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதியுடன் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சித்து உள்ளிட்டவர்கள் இருப்பது போன்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Pak PM 2.png
Facebook LinkArchived Link

இந்தியா டுடேவின் ஆஜ்தக் இந்தி ஊடகம் வெளியிட்ட படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தில், பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், ராணுவ தளபதி உரையாடுகிறார்கள். அவர்களுக்கு பின்னால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நவஜோத் சிங் சித்து உள்ளிட்டவர்கள் உள்ளனர்.

நிலைத் தகவலில், “பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதியுடன் ராகுல் மற்றும் மம்தா. எங்கே செல்கிறது இந்த கேடுகெட்ட அரசியல்?” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Sundaram Kaavi என்பவர் 2020 ஜனவரி 5ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா டுடே ஆஜ்தக் வெளியிட்ட படம் என்பதால் அதில் என்ன சொல்லியுள்ளார்கள் என்பது புரியவில்லை என்றாலும் படம் உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் ஷேர் செய்துள்ளனர். இந்தியில் என்ன எழுதியுள்ளது என்று நம்முடைய இந்தி பிரிவு நண்பர்களிடம் கேட்டோம். அதற்கு அவர், “பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதியுடன் ராகுல் காந்தி, மம்தா இருக்கும் வைரல் புகைப்படத்தின் உண்மை என்ன” என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இது அந்த ஊடகம் வெளியிட்ட உண்மை கண்டறியும் ஆய்வு கட்டுரை என்றும், நம்முடைய இந்தி பிரிவும் கூட இது தொடர்பான கட்டுரையை வெளியிட்டுள்ளது என்றும் கூறினர். அந்த கட்டுரை இணைப்பை பிறகு தேடி எடுத்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் நம்முடைய நடைமுறையில் இந்த படம் பற்றிய ஆய்வு மேற்கொண்டோம். இந்த படத்தில் ராகுல் காந்தி, சித்து, மம்தா பானர்ஜி தெளிவாகத் தெரிகின்றனர். கடைசியில் இருப்பவர் சத்ருகன் சின்கா போல உள்ளது. அந்த அறைக்கு வெளியே ஒருவர் தொழுகை செய்வது போல உள்ளது. படத்தில் பாக் பிரதமர், ராணுவ தளபதி என அந்த அறை முழுக்க மஞ்சள் மயமாக இருக்கிறது. ஆனால், அறைக்குள் இருக்கும் ராகுல் காந்தி, மம்தா உள்ளிட்டவர்கள் படம் அதற்கு துளியும் சம்பந்தம் இல்லாமல் பளீச் என்று இருந்தது. எனவே, இது எடிட் செய்யப்பட்ட படம் என்பது தெரிந்தது.

இதை உறுதி செய்ய, படத்தை fotoforensics.com என்ற இணையதளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பாக் பிரதமர், ராணுவ தளபதி மேல் உள்ள கருப்பு மற்றும் வண்ண புள்ளிகள் ராகுல் உள்ளிட்டவர்கள் மீது இல்லாமல் இருப்பதைக் காண முடிந்தது. இவை எல்லாம் இந்த படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்தன.

Pak PM 3.png

அசல் படத்தைக் கண்டறிய, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஏ.பி.பி செய்தி நிறுவனம் எடுத்த புகைப்படம் 2019ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி வெளியாகி இருந்ததாக செய்திகள் கிடைத்தன. அதில், இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் அழைப்பின் பேரில் அவரை ராணுவ தளபதி கமர் ஜாவித் பாஜ்வா சந்தித்து பேசினார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Pak PM 4.png
Search LinkArticle LinkArchived Link

2019 ஏப்ரல் 4ம் தேதி என்பது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்த நேரம். அப்படி இருக்கும்போது ஏப்ரல் 4ம் தேதி எப்படி ராகுல் காந்தி இஸ்லாமாபாத் சென்றிருப்பார் என்ற கேள்வி எழுந்தது. ஏப்ரல் 4ம் தேதி ராகுல் காந்தி எங்கிருந்தார் என்று அறிய அவரது தேர்தல் பிரசார பயணத்தை ஆய்வு செய்தோம். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவருடைய பிரசார பயணம் இருந்தது. அதில் ஏப்ரல் 4ம் தேதி அவர் கேரளா, மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் என்று இருந்தது.

ஏப்ரல் 3ம் தேதி பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய வந்திருந்தபோது மம்தாவை கடுமையாக தாக்கியிருந்தார். அதற்கு ஏப்ரல் 4ம் தேதி நடந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்தார் என்று செய்திகள் கிடைத்தன. இதன் மூலம் இந்த புகைப்படம் போலியானது, தகவல் தவறானது என்பது உறுதியானது.

Pak PM 5.png
inc.inArchived Link 1News 1News 2

நம்முடைய ஆய்வில்,

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதி சந்தித்தபோது வௌியான அசல் படம் கிடைத்துள்ளது.

படம் எடுக்கப்பட்ட தினம் ராகுல் காந்தியும் மம்தா பானர்ஜியும் இந்தியாவில் தீவிர தேர்தல் பிரசாரத்திலிருந்தது உறுதியாகி உள்ளது.

இந்த புகைப்படம் தொடர்பான உண்மை கண்டறியும் ஆய்வுகள் இது போலியானது என்பதை உறுதி செய்துள்ளன.

Pak PM 6.png

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் ராணுவ தளபதியும் சந்தித்துக்கொண்ட போது அருகில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் அமர்ந்திருந்ததாக பகிரப்படும் தகவல் பொய்யானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பாகிஸ்தான் பிரதமருடன் ராகுல் காந்தி மற்றும் மம்தா இருக்கும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False