
பீகார் மருத்துவமனை வார்டுக்கு உள்ளே தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மருத்துவமனை வார்டுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம், டாக்டர் ஒருவர் டிரை சைக்கிளில் வெள்ளத்துக்கு இடையே அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “பீகார் அரசு மருத்துவமனையின் அவலநிலையை பாருங்கள்..!!! மருத்துவர்கள், மருத்துவமனை எங்கும் சாக்கடை நீரால் நிரம்பி உள்ளது.. மக்களுக்கான பாஜக கூட்டணி நித்தீஸ்குமார் அரசு..!! இதையெல்லாம் பார்த்து நீங்கள் நம்ப வேண்டும் இது மக்களுக்கான அரசு என்று” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை கொரோனோவிலிருந்து பாதுகாப்போம் ! என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Zulfihar Ibnu Ajmal Khan என்பவர் 2020 ஜூலை 17ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் வெள்ளம் புகுந்திருந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. சென்னையில் 2016ம் ஆண்டு கனமழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பல மருத்துவமனைகள், அலுவலகங்கள், வங்கிகள் தண்ணீரில் மூழ்கின.
அதே நேரத்தில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கூறப்பட்டது போன்று முறையான பராமரிப்பு இன்மை காரணமாக கழிவுநீர் மருத்துவமனை வார்டுக்குள் இருந்தால் உண்மையில் அது மோசமான பிரச்னைதான். அதே நேரத்தில் மருத்துவர் ஒருவர் டிரை சைக்கிளில் செல்வது ஒன்றும் மோசமான பிரச்னையாக கருத முடியாது. எந்த வசதியும் இல்லாத நிலையில் அந்த வண்டியிலாவது சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க நினைத்த அந்த மருத்துவருக்கு பாராட்டுக்கள்.
முதலில், மருத்துவமனை வார்டில் கழிவுநீர் தேங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ள படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஊடகங்கள் அந்த படத்தை பயன்படுத்தியது தெரிந்தது. ஆனால், எந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டறிவது சிரமமாக இருந்தது. அப்போது ஹைதராபாத்தின் புகழ்மிக்க ஒஸ்மானியா மருத்துவமனையில் வெள்ளம் என்று ஒரு செய்தி கிடைத்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படமும் இருந்தது. அதில், ஐஏஎன்எஸ் என்ற செய்தி நிறுவனம் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

ஐஏஎன்எஸ் புகைப்பட பக்கத்துக்கு சென்று தேடினோம். அப்போது வார்டில் தண்ணீர் இருக்கும் புகைப்படம் நமக்கு கிடைத்தது. அதில் இந்த புகைப்படத்தை ஜூலை 15ம் தேதி எடுத்ததாக குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், அந்த படம் பற்றிய குறிப்பில், “ஹைதராபாத் ஒஸ்மானியா மருத்துமனைக்குள் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து புகுந்தது. தெலங்கானாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவனை இது” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதன் மூலம் இந்த புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டது இல்லை, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.
டிரை சைக்கிளில் டாக்டர் அமர்ந்து செல்லும் படம் எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். அந்தப் படத்தைப் பற்றி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் எதையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் அது எங்கு எடுக்கப்பட்டது என்று மட்டும் ஆய்வு நடத்தினோம்.
பீகாரில் கன மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு செல்வதில் மருத்துவர்கள் பிரச்னை சந்தித்து வருகின்றனர்,’’ என்று என்.டி.டி.வி வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டது உறுதியாகிறது.

நம்முடைய ஆய்வில், மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்த புகைப்படம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவல் சேர்த்துப் பகிரப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மழை நீர் தேங்கிய மருத்துவமனை புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டது இல்லை!
Fact Check By: Chendur PandianResult: Partly False
