அயோத்தி ராமர் கோவிலில் நள்ளிரவில் வழிபடும் குரங்கு என்று பரவும் வீடியோ உண்மையா?
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் குரங்கு ஒன்று தினமும் இரவு வந்து வழிபட்டு செல்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
குரங்கு ஒன்று கோவிலுக்குள் வந்து இறைவனை வழிபடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்தியில் பேசப்படுகிறது. நிலைத் தகவலில், “அயோத்தியில், தினமும் இரவில் யாரும் இல்லாத நேரத்தில் குரங்கு வந்து ராமர் கோவிலில் வழிபாடு செய்து வந்தது.ஒரு நாள் இரவு, அந்த கோவிலின் அர்ச்சகர் ஒருவர், இந்த சம்பவத்தை கண்டு ஆச்சரியமடைந்தார்.மறுநாள், குரங்கு மீண்டும் வந்தது. அதே சமயம், இந்தக் குரங்கின் ராம பக்தியைக் கண்டு வியந்தான். இது மொபைலில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் கடவுள் பக்தி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை Jai Ganesh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 2ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி விரைவாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்குள் தினமும் குரங்கு வந்து ராமரை வணங்கிவிட்டு செல்கிறது என்று வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இன்னும் கட்டி முடிக்கப்படாத கோவிலை சொல்கிறார்களா, அல்லது அயோத்தியில் உள்ள வேறு ஒரு ராமர் கோவிலைப் பற்றி சொல்கிறார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்தோம்.
முதலில் வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள புத்தேஷ்வர் மகாதேவ் கோவிலில் குரங்கு ஒன்று தினமும் வந்து வழிபாடு செய்து செய்கிறது என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.
உண்மைப் பதிவைக் காண: odishatv.in I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கோவில் லக்னோவில் உள்ள புத்தேஷ்வர் மகாதேவ் கோவில்தானா என்று அறிய அந்த கோவிலின் புகைப்படங்கள் கிடைக்கிறதா, அது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் ஒத்துப்போகிறதா என்று பார்த்தோம். கூகுள் மேப்-ல் நமக்கு கோவிலின் புகைப்படம் கிடைத்தது. அதன் முதல் வீடியோவே குரங்கு வந்து வழிபடும் வீடியோதான். தொடர்ந்து தேடிய போது கோவிலின் உட்புற தோற்றமும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சியும் ஒத்துப்போனது.
புத்தேஷ்வர் மகாதேவ் கோவில் என்பது சிவபெருமானுக்கு உரிய கோவிலாகும். குரங்கு வந்து வழிபடும் வீடியோ உண்மையானதுதான். ஆனால், அது அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து வீடியோ பகிரப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.
முடிவு:
அயோத்தியில் ராமர் கோவிலில் வழிபாடு நடத்தும் குரங்கு என்று பரவும் வீடியோ லக்னோவில் உள்ள சிவன் கோவிலில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:அயோத்தி ராமர் கோவிலில் நள்ளிரவில் வழிபடும் குரங்கு என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Partly False