டெல்லியில் 40 இஸ்லாமியர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

டெல்லி வன்முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 40 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட 16 வயது சிறுமி என்று ஒரு சிறுமியின் படத்தை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

சிறுமி ஒருவரின் படத்தின் மீது போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது. அதில், “டெல்லி வன்முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 40 பேரால் கற்பழிக்கப்பட்டு ஒட்டுத்துணியில்லாமல் சாக்கடையில் வீசப்பட்ட 16 வயதே ஆன என் தேசத்துச் சிறுமி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  படத்தின் கீழ் சிறுமியின் பெயர் ஜோதி படிதார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை நாங்க RSS 🚩🚩💪💪 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கு. அய்யா துரை என்பவர் 2020 மார்ச் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்களுக்கும் ஆதரவாக போராடியவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 46-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. ஆனால், 16 வயது சிறுமி 40 பேரால் வன்கொடுமை செய்யப்பட்டார் என்று படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். 40 பேர் வன்கொடுமை செய்தது இவர்களுக்கு எப்படி தெரியவந்தது தெரியவில்லை. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பாஸ்கர் என்ற இந்தி ஊடகம் இந்த சிறுமி படத்துடன் பிப்ரவரி 21ம் தேதி வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. இந்தியில் இருந்த அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து படித்துப் பார்த்தோம். அப்போது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12ம் வகுப்பு மாணவி சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்து கிடந்தார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Search Link

அந்த செய்தியைப் பார்த்தோம். பிரகாஷ் படிதாரின் மகள், 16 வயதான ஜோதி படிதார் பிப்ரவரி 20ம் தேதி தனியாக இருந்துள்ளார். அவரது தந்தை வேலை விஷயமாக ஜிராபூருக்கு சென்றுவிட்டார். அவரது அம்மா வயலுக்கு சென்றுவிட்டார். மாலை 4 மணி அளவில் ஜோதி படிதார் வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. கிராம மக்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஜோதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜோதி ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள சிறுமியின் படத்தின் கீழ் ஜோதி படிதார் என்று உள்ளது. இந்தி ஊடகம் பாஸ்கர் வெளியிட்ட செய்தியில் அதே படம், மற்றும் பெயர் உள்ளது. இதன் மூலம் பிப்ரவரி மாதம் இறந்த சிறுமியின் படத்தை எடுத்து மிக அநாகரீகமான கருத்தைப் பதிவிட்டு இந்த பதிவை வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

bhaskar.comArchived Link

வேறு ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று அறிய மாணவியின் பெயர், மத்தியப் பிரதேசம், தீக்குளித்து தற்கொலை ஆகிய கீ வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, thequint.com என்ற ஊடகத்தில் இந்த மாணவி தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் வீட்டில் இந்த சிறுமி இறந்துகிடந்தார் என்று இந்தியில் வதந்தி பரவி வருவதாகவும் ஆனால், அது தவறான செய்தி என்றும் குறிப்பிட்டிருந்தனர் இவர்களும் பாஸ்கர் இந்தி ஊடகத்தின் செய்தியை ஆதாரமாக அளித்திருந்தனர். கூடுதலாக, மத்தியப் பிரதேச மாநிலம் சுஸ்னர் காவல் நிலைய ஸ்டேஷன் அவுஸ் ஆபீசரிடம் பேசி இந்த தகவலை உறுதி செய்திருந்தனர். 

அந்த அதிகாரி, “பிப்ரவரி 20ம் தேதி மாணவி இறந்தது தொடர்பாக நாங்கள்தான் விசாரணை நடத்தி வருகிறோம். மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர் புகார் செய்திருந்தனர். பக்கத்து வீட்டு பையன் மீது அவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தனர். விசாரித்தபோது சம்பவம் நடந்தபோது அந்த நபர் அந்த கிராமத்திலேயே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தற்கொலைக்குத் தூண்டியதாக அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

நம்முடைய ஆய்வில்,

ஃபேஸ்புக் பதிவில் உள்ள சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் இறந்து கிடந்தார் என்ற செய்தி கிடைத்துள்ளது.

இதை இந்த வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி உறுதி செய்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஏற்கனவே இறந்த சிறுமியை கலங்கப்படுத்தும் வகையில் டெல்லி கலவரத்தின்போது இஸ்லாமியர்கள் அவளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்கள் என்று விஷமத்தனமாக வதந்தி பரப்பப்பட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:டெல்லியில் 40 இஸ்லாமியர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •