
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அகழ்வாராய்ச்சி செய்வது, பூமியில் இருந்து கிடைத்த புத்தர் சிலைகள் என 10-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இந்தியா வரலாறு என்பதே பெளத்தத்திற்க்கும் பார்பனியத்திற்க்கும் இடையே நிகழ்ந்த மோதல்களே.! பெளத்தம் வீழ்த்தப்பட்டு பார்பனியம் சூழ்ச்சியால் வென்றது.! என்ற அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளை மெய்பிக்ககும் வகையில் இன்று அயோத்தியில் தோண்ட தோண்ட #அறிவாசன்_புத்தரின்_சிலைகள்.. வரலாற்றை யாராலும் மறைக்கமுடியாது.! வரலாறு திரும்புகிறது.! மிக்கமகிழ்ச்சி. ஜெய்பீம். சூரியன் நிலா உண்மை… மூன்றையும் வெகு நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது.. – புத்தர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, ஈ.வெ.ரா குறளோவியன் என்பவர் 2020 மே 29ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து 2020 மார்ச் மாதம் பூமி பூஜை நடந்தது. அதற்குள் ஊரடங்கு வரவே பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர், மே மாதம் ராமர் கோவில் கட்ட நிலத்தைத் தோண்டியபோது சிவ லிங்கம் கிடைத்ததாக செய்திகள் வெளியாகின. அதே நேரத்தில் அங்கு புத்த கோவில் இருந்ததாகவும் அதை உறுதி செய்யும் வகையில் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அயோத்தியில் புத்தர் சிலை கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஜே.சி.பி இயந்திரத்தால் தோண்டப்பட்ட படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அது எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை. 2019, 17 என்று பல ஆண்டுகளாக இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. 2015ம் ஆண்டு ட்விட்டரில் ஒருவர் இதை பகிர்ந்திருந்தார். ஆனால், இது எங்கே எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்ததே 2020 மார்ச் மாதத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது புத்தர் படம் பீகார் மாநிலம் நலந்தாவில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்று 2016ம் ஆண்டு வெளியான ட்வீட் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தனர்.
மூன்றாவதாக கிணறு படத்தைப் பற்றித் தேடினோம். அது பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் கிடைத்தன. இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் 2019 ஜனவரி 23ம் தேதி வெளியிட்ட செய்தி மற்றும் படம் நமக்கு கிடைத்தது.
நான்காவது படம் பாகிஸ்தானில் உள்ளதாக தாய்லாந்து மொழியில் 2013ம் ஆண்டு வெளியான பிளாக் பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஐந்தாவது படம் ஒடிஷாவில் உள்ளதாக 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில் படத்தை வெளியிட்டிருந்தனர்.
குகைக்குள் புத்தர் தலைமட்டும் தெரியும் ஆறாவது புகைப்படம், ஆப்கானிஸ்தானில் காபூலிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள Mes Aynak என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக 2015ல் வெளியான ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தனர்.
7வதாக பதிவிடப்பட்டிருந்த வரிசையாக மண்ணில் புதைந்திருக்கும் புத்தர் புகைப்படம் மியான்மரில் கண்டெடுக்கப்பட்டதாக 2020 மார்ச் 6ம் தேதி வெளியான மியான்மர் மொழி இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த இணையதளத்தில் இந்த புத்தர் சிலை தொடர்புடைய மற்ற புகைப்படங்களைப் பார்க்கும்போது, கண்டெடுத்தவர்கள் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் போலவே உள்ளனர். அயோத்தி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் போல யாரும் இல்லை.
எட்டாவது புகைப்படம் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள சிற்பம் என்று தெரியவந்தது.
புத்தரின் தலைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 9வது படம், 2012ம் ஆண்டு பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது. புத்தரின் தலையை கடத்தல்காரர்களிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்து காட்சிக்கு வைத்ததாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.
10வது படமும் பாகிஸ்தானில் 2012ம் ஆண்டு எடுக்கப்பட்டது. மில்லியன் டாலர் அகழாய்வு பொருட்கள் கள்ளக்கடத்தல் என்று செய்தி வெளியிட்டிருந்தனர். 10வது படத்தைத் தொடர்ந்து வந்த புகைப்படங்கள் எல்லாம் பாகிஸ்தானில் கள்ளக்கடத்தலிலிருந்து தப்பியவை என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நம்முடைய ஆய்வில்,
ராமர் கோவில் கட்டலாம் என்ற தீர்ப்பு கடந்த 2019 நவம்பரில்தான் வந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் 2020 மார்ச் மாதம் பூமி பூஜை செய்யப்பட்டு, மே மாதம் தொடங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவில் இடம் பெற்ற ஒரு சிலவற்றைத் தவிர்த்து எல்லா படங்களும் 2019 நவம்பர் ராமர் கோவில் தீர்ப்புக்கு முன்னரே சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது உறுதியாகி உள்ளது.
ஒரு சில படங்கள் மட்டும் எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லாமல் உள்ளன.
மற்ற படங்கள் எல்லாம் இந்தியாவின் பீகார், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியன்மர் உள்ளிட்ட நாடுகளில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் தோண்டியபோது கிடைத்த புத்தர் சிலைகள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை?
Fact Check By: Chendur PandianResult: False
