
அஸ்ஸாமில் பால் கொடுத்து வளர்த்த பசுவை தாயாக சிறுத்தை ஒன்று கருதி அதனுடன் பழகி வருகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
பசுவோடு சிறுத்தை ஒன்று அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “அஸ்ஸாமில் ஒரு கிராமத்தில் ஒருவர் பசுமாடு ஒன்றை வாங்கி வந்துள்ளார். இரவில் நாய்கள் குரைத்துள்ளன. கிராமத்தினர் ஊரடங்கை சாக்காக வைத்து திருடர்கள் வருகிறார்களோ என்று சந்தேகப்பட்டு சிசிடிவி கேமரா வைத்துள்ளனர். அதில் கிடைத்த படங்கள்தான் இவை. உடனே அவர்கள் பசு மாட்டை விற்ற கிராமத்தில் போய் விசாரித்துள்ளனர். ஒரு சிறுத்தைக் குட்டி பிறந்த 20 நாட்களில் தாயை இழந்துள்ளது .. அந்த கிராமத்தினர் குட்டியை இந்த பசு மாட்டிடம் பாலுக்காக கொண்டு விட்டனர். பசுவும் அதற்கு தாய்போல பால் கொடுத்து வந்துள்ளது. சிறுத்தைக் குட்டி கொஞ்சம் நன்றாக வளர்ந்ததும் அதை காட்டில் கொண்டு விட்டு விட்டனர். ஆனாலும் அது இரவு நேரத்தில் தனக்கு பாலூட்டி வளர்த்த பசு மாட்டை தாயாக நினைத்து பார்க்க வருமாம்…!
பசு மாடு இடம் மாறியதும் அது இந்த கிராமத்துக்கு தாய் #பாசத்துடன் தேடி வந்து விட்டது. மனிதன் பாலுக்காக பசுவை பயன்படுத்தி விட்டு… அதற்கு வயதான பின் பயனில்லை என்று அடிமாட்டுக்கு அனுப்பும் மிருகமாகிவிட்டான். ஆனால் மிருகமோ… மேம்பட்ட நிலையில் பாசம் காட்டுகிறது. மனிதன்… மிருகத்திடம் கற்க வேண்டியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூலை 30ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தைப் பார்க்க கிராஃபிக்ஸ் போல இல்லை. இதனால் படம் உண்மையானதாக இருக்கலாம், தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். அஸ்ஸாம், பசுமாடு, சிறுத்தை என கீ வார்த்தைகளை டைப் செய்து கூகுளில் தேடியபோது இது தொடர்பாக வெளியான உண்மை கண்டறியும் ஆய்வுகளுடன் சில பதிவுகள் கிடைத்தன.
2003ம் ஆண்டு வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி ஒன்று கிடைத்தது. அதில், குஜராத் மாநிலத்தில் பசு மாட்டுடன் சிறுத்தைக்கு காதல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், இரவில் நாய்கள் குலைப்பது அதிகரிக்கவே, மக்கள் என்ன நடக்கிறது என்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறுத்தை ஒன்று பசு மாட்டுடன் நட்பு பாராட்டி வந்துள்ளது தெரிந்தது. முதலில் பசுமாட்டின் உரிமையாளர் இது பற்றி கூறியபோது யாரும் இதை நம்பவில்லை.
நாட்கள் செல்லச் செல்ல கிராம மக்கள், பக்கத்து கிராம மக்கள் என அனைவரும் இரவில் வந்து அந்த நட்பை பார்த்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கவே, அந்த சிறுத்தை பசு மாட்டை பார்க்க வருவதைக் குறைத்துக் கொண்டது என குறிப்பிட்டிருந்தனர். மேலும், பசு மாட்டுடன் சிறுத்தை நட்புடன் பழக்கம் வைத்துக் கொண்டது ஏன் என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.
மற்றபடி அஸ்ஸாமில் பசு மாட்டுடன், சிறுத்தை இணைந்து இருப்பது போன்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, கற்பனையை விட வித்தியாசம், பசுவை தாயாக கருதும் சிறுத்தை என்று 2014ம் ஆண்டு வெளியான செய்தி ஒன்று கிடைத்தது.
அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அந்த தகவலில் இந்த நிகழ்வு குஜராத் மாநிலத்தில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அதாவது 2002ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்ட அதே கிராமத்தில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த செய்தியைப் படித்துப் பார்த்தபோது, 2002ம் ஆண்டு குஜராத் மாநிலம் அன்டோலி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து வனத் துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்தனர். அந்த சிறுத்தையின் குட்டி தனித்து விடப்பட்டிருக்கலாம். அதன் காரணமாக பசுவிடம் அது பாசமாக இருந்திருக்கலாம் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், பசு அந்த சிறுத்தைக்கு பால் கொடுத்து வளர்த்தது என்று கூறவில்லை. இதை ஒரு பத்திரிகை (டைம்ஸ் ஆப் இந்தியா) காதல் என்று சினிமா தலைப்பிட்டு வெளியிட்டது எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. அதில் சிறுத்தைக்கு பிடித்தமான ஆடு, நாய் என விதவிதமாக வைத்தும் எதையும் சிறுத்தை கண்டுகொள்ளவில்லை. பசு மாட்டுடன் வந்து விளையாடிவிட்டு செல்வதையே வழக்கமாக வைத்திருந்தது.
கடைசியாக, அந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி அது வந்தது. அன்று கிராமத்தில் கலை விழா நடந்தது. மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு மற்றும் விழா அன்று மேளதாளம் முழக்கம் சாத்தம் காரணமாக அந்த சிறுத்தை வருவதைக் குறைத்துக் கொண்டது. அதன் பிறகு அந்த கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தாலும் வருவது அந்த சிறுத்தைதானா என்று தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தனர். பசுவுடன் சிறுத்தை நட்பு பாராட்டியது ஏன் என்று தெரியவில்லை. கடவுளுக்கே அது தெரியும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய தேடலில் எந்த இடத்திலும் அந்த சிறுத்தைக்கு பசுதான் பால் கொடுத்தது என்று செய்தி கிடைக்கவில்லை.
சிறுத்தையை பசு வளர்த்தது, அந்த பசுவை வேறு கிராமத்தினருக்கு விற்றனர், அதனால், சிறுத்தை அங்கு வந்தது என்பது போன்று எந்த ஒரு தகவலையும் கிராம மக்கள் கூறவில்லை. பசுவைத் தேடி ஏன் வருகிறது என்று புரியவில்லை என்று கிராம மக்கள், வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புகைப்படம் அஸ்ஸாமில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அஸ்ஸாமில் பால் கொடுத்த வளர்த்த பசுவை சிறுத்தை தாயாக கருதி பழகி வருகிறது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அஸ்ஸாமில் பால் கொடுத்த பசுவை தாயாக நினைத்து பழகும் சிறுத்தை!- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
