
மோடிக்காக 8458 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் விமானத்தின் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
சொகுசு விமானத்தின் உட்புறப் பகுதி படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல… மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்! பிரதமருக்காகத் தயாராகும் வான்வெளி வீடு ரூ.8,458 கோடி செலவில் நவீன விமானம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “மோடிக்காக வாங்கப்படும் சொகுசு விமானத்தின் விலை : 8,500. கோடி அவனவன் கொரோனாவில் சோறு இல்லாமல் செத்துகிட்டு இருக்கான். இதுல 8,500 கோடி ரூவாய்க்கு சொகுசு விமானம் கேட்குதா? சொகுசு விமானம்!
இப்பவாவது சொல்லுங்கடா! பி.எம்.கேர் பணத்தை என்னடா பண்ணுனீங்க? எங்கடா போச்சு அந்த பணம்? 8500 கோடிக்கு விமானம் வாங்க காசு எப்படிடா வந்துச்சு?
நாட்டு மக்கள் வறுமையில் செத்துக்கொண்டிருக்க மக்களை கசக்கிப்பிழிந்து வரி வசூலித்து ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வாழ்கிறது மோடி கும்பல்.. மோடி கும்பலின் கேடுகெட்ட ஆட்சியை வீழ்த்தாமல் இந்திய மக்களுக்கு வாழ்வில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Syed ibrahim.m.s என்பவர் 2020 ஆகஸ்ட் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்திய அரசு விமானங்களை வாங்குவது உண்மைதான். ரூ.8454 கோடிக்கு ஒரு விமானத்தை வாங்கவில்லை. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் பயணம் மேற்கொள்ள போயிங் நிறுவனத்திடமிருந்து இந்தியா இரண்டு விமானங்களை வாங்குகிறது. அதுவும் கொரோனா காலத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.
பல ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு நடந்து வருகிறது. அப்படி இருக்கும்போது கொரோனா காலத்தில் பி.எம் கேர்ஸ்-க்கு ஒதுக்கப்பட்ட நிதியில் விமானம் வாங்கப்படுவது போல ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
முதலில், இந்த புகைப்படம் பிரதமர் மோடிக்காக வாங்கப்படும் விமானத்தின் உட்புற தோற்றமா என்று ஆய்வு செய்தோம். அப்போது, சீனாவில் வாங்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான சொகுசு விமானத்தின் உட்புற காட்சி என்று நமக்கு செய்தி கிடைத்தது.
அந்த செய்தியில் இடம் பெற்ற படத்தை எடுத்து மோடிக்காக வாங்கப்பட்டுள்ள விமானத்தின் படம் என்று பகிர்ந்திருப்பது தெரிந்தது. இதன்மூலம் இந்த படம் மோடிக்காக வாங்கப்படும் விமானம் இல்லை என்பது உறுதியானது.
அடுத்தது கொரோனா காலத்தில் இந்த விமானம் வாங்கப்படும் முடிவு எடுக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். இது தொடர்பாக பிசினஸ் டுடே வெளியிட்ட செய்தி கிடைத்தது.
அதில், “கடந்த பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் விமானம் வாங்க ரூ.810 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், 2018-19, 2019-20ம் ஆண்டு பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தியக் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் 25 ஆண்டு பழைய போயிங் ரக விமானங்களிலேயே தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். அந்த விமானங்கள் அதன்பிறகு வர்த்தக பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பிரதமர், குடியரசுத் தலைவர், துணைத் தலைவருக்காக பிரத்தியேகமாக விமானம் வாங்கும் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் ஜூலை மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர். விமானத்தின் விலை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. ஆனால், 1.18 பில்லியன் (செய்தி வெளியான நாளின் இந்திய மதிப்பில் ரூ.8458 கோடி) மதிப்பு இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது
இந்தியாவிடம் விமானம் ஒப்படைக்கப்படாத நிலையில் விமானம் எப்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று கூகுளில் தேடினோம். அப்போது, கொரோனா தொற்று காலத்தில் விமானம் தயாரிப்பு பணியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக செப்டம்பர் மாதத்தில் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று செய்தி வெளியாகி இருந்தது தெரிந்தது.
இந்தியா வாங்கும் விமானம் போயிங் பி777 வகையைச் சேர்ந்தது. பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விமானம் என்பதால் இதை ஏர் இந்தியா விமானிகளுக்கு பதில், இந்திய விமானப் படையைச் சேர்ந்தவர்கள் ஓட்டுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட அதி நவீன விஷயங்கள் பொருத்தப்படுவதால் இதன் விலை அதிகம் என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம்,
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் சீனாவில் உள்ள தனியார் சொகுசு விமானத்தின் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்காக மட்டும் தனி ஒரு விமானம் வாங்கப்படவில்லை. இரண்டு விமானங்கள் வாங்கப்படுவதாக செய்தி கிடைத்துள்ளது.
விமானம் வாங்க அரசு வழங்கும் நிதி பற்றிய தகவலை அரசு வெளியிடவில்லை. அரசு ஒதுக்கீடு, மற்ற அனுமானத்தின் அடிப்படையில் இரண்டு விமானங்களுக்கான செலவு ரூ.8458 கோடி என செய்தி வெளியாகி உள்ளது நமக்கு கிடைத்துள்ளது.
ஏவுகணை எதிர்ப்பு உள்ளிட்ட விமானத்தின் பாதுகாப்பு அம்சத்துக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று செய்தி கிடைத்துள்ளது.
கொரோனா காலத்தில் இந்த விமானம் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2018ம் ஆண்டில் இருந்தே இதற்கான ஒதுக்கீடு நடந்து வருவதாக செய்தி கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் பிரதமர் மோடியின் விமானம் என்று சிறிது உண்மையுடன் நிறையத் தவறான தகவல் சேர்த்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மோடிக்காக ரூ.8458 கோடி கொடுத்து வாங்கப்படும் விமானத்தின் படமா இது?
Fact Check By: Chendur PandianResult: False
