
‘’இத்தாலியில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்கள்,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Mohamed Nithas என்பவர் மே 9, 2020 அன்று ஷேர் செய்திருந்த ஒரு வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். உண்மையில் அந்த வீடியோவை, மார்ச் மாதம் 27ம் தேதி தஃவத் தப்லீக் என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது.
சாலை போன்ற திறந்தவெளியில் அனைவரும் தலையைத் தாழ்த்தி பிரார்த்தனை செய்கின்றனர். பெரு என்ற வார்த்தையைத் தாண்டி வேறு எதுவும் நமக்கு புரியவில்லை. மொத்தம் 5.28 நிமிடங்கள் வீடியோ ஓடுகிறது.
நிலைத் தகவலில், “இத்தாலியில் அனைத்து மதம் சார்ந்தவர்களும் அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு மண்டியிட்டு பாதுகாப்பு தேடி பிரார்த்தனை செய்தனர் …!!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உண்மையில் அவர்கள் பேசுவது லத்தீன் போல இல்லை. என்ன மொழி பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், இத்தாலியில் கொரோனா கொரோனா உச்சத்தில் உள்ள நேரத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆனால், யாருடைய முகத்திலும் மாஸ்க் இல்லை. மேலும், இத்தாலியில் மார்ச் மாதம் ஊரடங்கு அமலில் இருந்தது. (இத்தாலியில் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிய மக்கள் இளையராஜா பாடலை பாடியதாக வதந்தி பரவியது. அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இது தொடர்பாக ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தது) அப்படி இருக்கும்போது, இத்தனை பேர் எப்படி கூட முடியும் என்ற சந்தேகமும் எழுந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பலரும் இத்தாலியில் தொழுகை மேற்கொண்ட மக்கள் என்று இந்த வீடியோவை ஷேர் செய்து வந்திருப்பதைக் காண முடிந்தது. இதே போல், பெருவில் கொரோனா பாதிப்பில் இருந்து காக்க மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள் என்று கிறிஸ்தவர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. அதுவும் மார்ச் மாத இறுதியில் இருந்தே பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், அவர்கள் இந்த வீடியோ பெருவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.
பெரு, கிறிஸ்தவ மதக் கூட்டம், கொரோனா உள்ளிட்ட கலைச் சொற்களை பயன்படுத்தி கூகுளில் மாற்றி மாற்றித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை ஒருவர் 2019 டிசம்பர் 7ம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்திருப்பதைக் காண முடிந்தது. அதில் பெருவுக்கான விழிப்பு பிரார்த்தனை என்று குறிப்பிட்டிருந்தார்.
Bethel Informa என்ற கிறிஸ்தவ அமைப்பு 2019 டிசம்பர் 7ம் தேதி அந்த வீடியோவை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது. அந்த வீடியோ நிலைத் தகவலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று மொழி மாற்றம் செய்து பார்த்தோம். அப்போது அது ஸ்பானிஷ் மொழியில் உள்ளது தெரிந்தது.
அதில், பெருவில் நடந்த நள்ளிரவு பிரார்த்தனை, பிளாசா சான் மார்டின், லிமா என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பெருவின் தலைநகர் லிமா என்பதால், பிளாசா சான் மார்டின் என்பது லிமாவில் உள்ள இடமாக இருக்கலாம் என்று கருதினோம்.
கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் சான் மார்டின், லிமா என்று டைப் செய்து தேடியபோது, திறந்தவெளி பூங்கா போன்ற இடம் தென்பட்டது. அதை பார்த்தபோது, வீடியோவில் இருந்தது போன்ற குதிரையில் ஒருவர் அமர்ந்திருக்கும் சிலை இருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ லிமாவில் எடுத்தது என்பது உறுதியானது.
கொரோனா தொற்று டிசம்பர் 31, 2019ல்தான் வெளியானது. ஆனால், இந்த வீடியோ அதற்கு முன்பாகவே வெளியாகி இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே, கொரோனா பாதிப்புக்கும் இந்த வீடியோவுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில்,
இந்த வீடியோ பெரு நாட்டில் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ 2019 டிசம்பர் 7ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது ஒரு கிறிஸ்தவ வழிபாடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து இஸ்லாமிய தொழுகையில் ஈடுபட்டனர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து தொழுகை நடத்தினார்களா?
Fact Check By: Chendur PandianResult: False
