
த.வெ.க-வில் இணையத் தயார் என்றும் துணைத் தலைவர் பதவி தர வேண்டும் என்றும் விஜய்யிடம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கோரிக்கை. துனைத்தலைவர் பதவியுடன் த.வெ.கவில் இனைய தயார் விஜய்க்கு வாசன் கோரிக்கை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைய விருப்பம் தெரிவித்ததாக நியூஸ் கார்டு ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் துணைத் தலைவர் என்பதை “துனை தலைவர்” என்றும் இணைய என்பதை “இனைய” என்றும் எழுத்துப் பிழையுடன் குறிப்பிட்டிருந்தனர். இவ்வளவு பிழையாக நியூஸ் கார்டை ஊடகங்கள் வெளியிட வாய்ப்பில்லை.
மேலும், த.வெ.க-வில் இணைய தயார் என்று ஜி.கே.வாசன் கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அவர் அப்படி கூறியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். ஆனால், ஜி.கே.வாசன் அப்படி கூறியதாக ஒரு துண்டு செய்தி கூட கிடைக்கவில்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டை சன் நியூஸ் வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். அக்டோபர் 12, 2025 அன்று இந்த நியூஸ் கார்டு வெளியானதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட அந்த நாளில் சன் நியூஸ் சமூக ஊடக பக்கங்களில், ஜி.கே.வாசன் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை.
தொடர்ந்து தேடியபோது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை 2025 ஆகஸ்ட் 14ம் தேதி சன் நியூஸ் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அதில், “கோரிக்கை, சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள் வெளியிடுவதை தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து வௌியிட்டிருப்பது தெரியவந்தது.

இதை உறுதிசெய்துகொள்ள, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் “இது போலியானது, சன் நியூஸ் வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
துணைத் தலைவர் பதவி தந்தால் த.வெ.க-வில் இணையத் தயார் என்று விஜய்க்கு கோரிக்கை வைத்த ஜி.கே.வாசன் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:துணைத் தலைவர் பதவி கொடுத்தால் த.வெ.க-வில் இணைய தயார் என்று ஜி.கே.வாசன் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False


