
கேஸ் வாங்க முடியாதவர்கள் விறகு அடுப்பை பயன்படுத்துங்கள் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டு மற்றும் திரைப்பட காட்சியை இணைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டு பகுதியில், “நம்ம முன்னோர்கள் என்ன கேஸ் வச்சா சமைச்சாங்க.? கேஸ் வாங்க முடியலனா விறகு அடுப்பை பயன்படுத்துங்கள் – அண்ணாமலை” என்று இருந்தது.
சினிமா புகைப்பட பகுதியில், “நீ சொன்ன வாக்கியத்தை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு பக்கத்துலயே உக்காந்துக்க..” என்று இருந்தது.
இந்த பதிவை Si Va Mohan என்பவர் 2021 செப்டம்பர் 5ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதே போன்று “இஸ்லாமிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கேஸ் சிலிண்டர்களை புறக்கணித்து பாரதப் பண்பாட்டு அடையாளமான விறகடுப்பை உபயோகிப்போம்” என்று அண்ணாமலை கூறியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை, ரவிகுமார் மணி என்ற ஃபேஸ்புக் ஐடியைக் கொண்ட நபர்2021 செப்டம்பர் 3ம் தேதி பகிர்ந்திருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ் நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. கேஸ் விலை உயர்வு பற்றி சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை கவலை தெரிவித்திருந்தார். கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கேஸ் வாங்க முடியாதவர்கள் விறகு அடுப்பை பயன்படுத்தும்படி அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அண்ணாமலை அப்படிக் கூறியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகியிருக்கும். எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் வரவில்லை. எனவே, இது போலியான நியூஸ் கார்டாக இருக்கலாம் என்று தெரிந்தது.
நியூஸ் கார்டில் செப்டம்பர் 5, 2021 அன்று நியூஸ் கார்டு வெளியானதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, செப்டம்பர் 5ம் தேதி இந்த நியூஸ் கார்டு வெளியானதா என்பதை உறுதி செய்வதற்காக நியூஸ் கார்டு வெளியான ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு சென்று பார்த்தோம். 5ம் தேதி அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. ஆனால், செப்டம்பர் 2ம் தேதி இதே புகைப்படத்துடன் வேறு ஒரு நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அதில், “சட்ட பேரவை நிகழ்ச்சிகளை தணிக்கை இல்லாமல் ஒளிபரப்ப வேண்டும். ஆளுங்கட்சிக்கு சாதகமானதை மட்டுமே ஒளிபரப்பக் கூடாது – அண்ணாமலை” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியானது.
அடுத்ததாக இஸ்லாமிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் காஸ் சிலிண்டர் என்று பரவும் நியூஸ் கார்டு பற்றி தேடினோம். அந்த நியூஸ் கார்டும் அசல் நியூஸ் கார்டு போல இல்லை. அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு பற்றி தேடினோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அப்போது, அந்த நியூஸ் கார்டு போலியானது என்று சம்பந்தப்பட்ட இணையதள ஊடகமே மறுப்பு வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டும் போலியானது என்று உறுதியானது.
இதன் அடிப்படையில் ஆய்வுக்காக நாம் எடுத்துக்கொண்ட இரண்டு நியூஸ் கார்டுகளும் போலியானவை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கேஸ் வாங்க முடியாதவர்கள் விறகு அடுப்பை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கேஸ் வாங்க முடியாதவர்கள் அடுப்பை பயன்படுத்தும்படி அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
