பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதைக் கொண்டாடிய அரபி ஷேக்குகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா சமூக ஊடகம் சர்வதேசம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதை அரபி ஷேக்குகள் கொண்டாடினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் காட்சிகள் காட்டப்படுகின்றன. இந்தியா வெற்றி பெற்றதும் அரபி உடையில் உள்ளவர்கள் கொண்டாடுவது போன்று வீடியோ உள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயித்தவுடன் துள்ளி குதித்து , கட்டிபிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அரேபிய ஷேக்குகள். இவங்களுக்கு பாக்கிஸ்தான் மேல் ஏன் இவ்வளவு கோபம் ?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை ஹிந்து சனாதனி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஆகஸ்ட் 29ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, வலதுசாரி அரசியல் ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில், இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய அரேபியர்கள் என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது.

வீடியோவில் கிரிக்கெட் காட்சி இருக்கும் பகுதியில் டிக்டாக் ஐடி வரவில்லை. ஆனால், அரபு ஷேக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் பகுதியில் மட்டும் டிக்டாக் ஐடி உள்ளது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த ஐடி-யில் உள்ள வீடியோவை கண்டறிவது சாத்தியமில்லை. எனவே, இந்த வீடியோ உண்மைதானா என்று அறிய ஆய்வுக்கு உட்படுத்தினோம். 

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2020ம் ஆண்டில் ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. 2022ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2022 ஆகஸ்ட் 27ம் தேதிதான் தொடங்கியது. அப்படி இருக்கும் போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ வெளியாகி இருப்பது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.

Archive

நமக்கு கிடைத்த ட்வீட் பதிவைப் பார்த்தோம். அரபி மொழியிலிருந்ததை மொழிமாற்றம் செய்து பார்த்த போது, 2020ம் ஆண்டு அமீரக கால்பந்தாட்ட போட்டியில் அரப் கிளப் வெற்றி பெற்றதை அந்த அணியின் உரிமையாளர்கள் கொண்டாடினர் என்று குறிப்பிட்டிருந்தனர். ஒன்று இரண்டு அல்ல பல ட்வீட்டர், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களில் இந்த வீடியோ 2020ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

Archive

மேலும் அதில் உள்ள சில வார்த்தைகளை அரபியில் மொழி பெயர்த்து தேடிய போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ போல வேறு சில வீடியோக்களும் யூடியூபில் இருந்து கிடைத்தன. அதில் கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றதைக் கொண்டாடினார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், கால்பந்தாட்ட போட்டி நடைபெறுவதை அரபி உடையிலிருந்தவர்கள் பார்க்கும் காட்சிகளும் இருந்தன. இவை எல்லாம் இந்த வீடியோ 2022 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ 2020ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் நாடுகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றதை அந்த அணியின் உரிமையாளர் கொண்டாடிய காட்சி என்று பலரும் 2020ம் ஆண்டு பதிவிட்டுள்ளனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2022 ஆசிய கோக்பை லீக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதை அரபி ஷேக்குகள் கொண்டாடினார்கள் என்று பகிரப்படும் வீடியோ 2020ம் ஆண்டில் நடந்த கால்பந்தாட்ட போட்டி ஒன்றின் போது எடுக்கப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதைக் கொண்டாடிய அரபி ஷேக்குகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False