
ராஜிவ் காந்தி – சோனியா காந்தி திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தி அரேபியர்கள் உடையில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அருகில் ராகுல் காந்தி நிற்பது போல உள்ளது. அதனுன், “ராஜீவ்..சோனியா நிக்ஹா புகைப்படம்.. இப்ப தெரியுதா இவனுங்களோட தேசப்பற்று” என்று தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Radha Krishnan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:
இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இந்துக்கள் இல்லை என்பதை எப்படியாவது நிரூபித்துவிட வேண்டும் என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்திரா காந்தி இஸ்லாமியர் என்றும், அவரது திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது என்றும் வதந்தி பரப்பப்பட்டது. அது தவறான தகவல் என்று ஏற்கனவே உறுதி செய்திருந்தோம்.
கட்டுரைகள்:
இந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்?- ஃபேஸ்புக் விஷமம்
ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்களா? திட்டமிட்டு பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…
சோனியா காந்தி இத்தாலி நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரது திருமணம் தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது என்று முன்பு வதந்தி பரப்பப்பட்டது. ஆனால், ராஜிவ் – சோனியா காந்தி திருமணம் பதிவுத் திருமணமாக நடந்தது என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
தற்போது, இஸ்லாமிய முறைப்படி நடந்தது என்று ஒரு படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதுவும் மதத்தை வைத்து தேசப்பற்றை அளவிட்டிருந்தனர். தேசப்பற்றை அளவிடும் விஷயத்துக்குள் செல்லவில்லை. ராஜிவ் திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்ததா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை. வெளிநாட்டுக்கு சென்ற போது அந்த நாட்டு பாரம்பரிய உடையை ராஜிவ் காந்தி, சோனியா காந்தி அணிந்தது போல உள்ளது. ஆனால் இது எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்த படத்தை கூகுள் உள்ளிட்ட ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். ஆனால் எந்த ஒரு தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை. இதனால் இந்த புகைப்படம் பற்றிய தகவலை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை.
அதே நேரத்தில் அவரது திருமணம் எந்த ஒரு மதம் சார்ந்தது போன்று அல்லாமல் பதிவுத் திருமணமாக நடந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ராஜிவ் காந்தியின் இறுதிச் சடங்கு வீடியோக்களும் நமக்கு யூடியூபில் இருந்து கிடைத்தன. அதில் இந்து முறைப்படி மந்திரங்கள் முழங்க, ராஜிவ் காந்தி சிதைக்கு ராகுல் காந்தி தீ மூட்டுவதைக் காண முடிகிறது. அது மட்டுமல்லாமல் ராஜிவ் காந்தியின் அஸ்தியை இந்து முறைப்படி ராகுல் காந்தி ஆற்றில் கரைக்கும் வீடியோவும் நமக்கு கிடைத்தது.
கிறிஸ்தவ, இஸ்லாமிய முறைப்படி இறந்தவர்களின் உடலை எரிப்பது இல்லை. ராஜிவ் காந்தி இஸ்லாமியராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ மாறியிருந்தால் யாருக்காகவும் அவரது இறுதிச் சடங்கில் மாற்றம் செய்திருக்க மாட்டார்கள். அவர் நம்பிக்கை படியே அடக்கம் செய்யப்பட்டிருப்பார். இந்து முறைப்படி உடல் அடக்கம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் ராஜிவ் காந்தி இந்து என்பது தெளிவாகிறது. மதம் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பத்திற்கு உட்பட்டது. அது ஆய்வுக்கு உட்பட்டது இல்லை என்றாலும், ராஜிவ் காந்தி – சோனியா திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
ராஜிவ் காந்தி – சோனியா திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ராஜிவ் காந்தி – சோனியா திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
