FACT CHECK: ஜப்பான் ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் என்று பகிரப்படும் பழைய வீடியோ!

இந்தியா சமூக ஊடகம் சர்வதேசம்

ஜப்பான் ஒலிம்பிக் தொடக்க விழாவில் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

“டோக்கியோ ஒலிம்பிக்கில் பாரத நாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய நமஸ்காரம் செய்யப்படுகிறது..” என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் குறிப்பிட்டதையே நிலைத் தகவலிலும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை Kalaiselvi Samyraj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூலை 25 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோ தெளிவின்றி இருந்தது. உண்மையில் ஜப்பான் ஒலிம்பிக்ஸில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருந்திருந்தால் தெளிவான வீடியோவை வெளியிட்டிருக்கலாம். எதையோ மறைப்பதற்காக தெளிவற்ற வீடியோவை பகிர்ந்துள்ளனர். எதை மறைக்கிறார்கள் என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல மாதங்களுக்கு முன்பு இருந்தே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவது தெரிந்தது. இவற்றுக்கு இடையே பிரதமர் மோடி வெளியிட்ட யூடியூப் வீடியோ இணைப்புடன் கூடிய ட்வீட் ஒன்றும் கிடைத்தது. 

Archive

2015ம் ஆண்டு வெளியான அந்த ட்வீடில் மங்கோலியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது, மங்கோலியாவில் உள்ள வாழும் கலை அமைப்பினர் அவரை வரவேற்கும் விதத்தில் சூரிய நமஸ்காரம் மற்றும் யோகா செய்தனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதன் மூலம் ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜப்பான் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவின் போது சூரிய நமஸ்காரம் செய்து காண்பிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை தகுந்த ஆதாரங்களுடன் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜப்பான் ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் என்று பகிரப்படும் பழைய வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •