FACT CHECK: சீதை அமர்ந்து தவம் செய்த பாறையை இந்தியாவிடம் வழங்கியதா இலங்கை?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

அசோக வனத்தில் சீதை அமர்ந்து தவம் செய்த பாறையை இந்தியாவிடம் இலங்கை அரசு வழங்கியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

விமானத்தில் இருந்து சிலர் அரசு மரியாதையுடன் நினைவு பரிசு போன்று இருக்கும் ஒன்றை எடுத்து வருகின்றனர். அதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தும் காட்சி கொண்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. 

நிலைத் தகவலில், “இராவனேஸ்வரன் கடத்திச்சென்று அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதா பிராட்டி அமர்ந்து தவம் செய்த பாறையை இந்தியாவின் அயோத்தியா கோயிலுக்கு வழங்கியது இலங்கை அரசு…. நம் தேசத் தலைவன் மோடி அவர்களின் துணைவன் உத்திரப் பிரதேச மாநிலத்தின் காவலன் யோகி ஜி அவர்கள் பெற்றுக்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவைக் காவியத் தலைவன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 4ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2021 அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் விமானநிலையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். புத்த மதத்தினரின் புனிதமான இடங்களுக்குச் செல்லும் சர்வதேச பக்தர்களின் வசதிக்காக இந்த விமானநிலையம் அமைக்கப்பட்டிருந்தது. விமான நிலைய திறப்பு விழாவில் இலங்கை விமானம் முதல் விமானமாகத் தரையிறங்கியது. அப்போது புத்தரின் புனித நூல்களை அவர்கள் கொண்டு வந்தனர்.

இலங்கை அமைச்சர் நாமல் மற்றும் புத்த மத கொள்கையைப் பரப்பும் குழுவினரையும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் நேரில் வரவேற்றனர்.

அசல் பதிவைக் காண: pib.gov.in I Archive 1 I hindutamil.in I Archive 2

இந்த சூழலில் இலங்கையில் சீதை அமர்ந்து தவம் செய்த பாறையை இலங்கை அரசு இந்தியாவிடம் வழங்கியதாகவும், அந்த பாறை அயோத்தி ராமர் கோவிலில் வைக்கப்படும் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வரவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இந்த விழா தொடர்பாக மத்திய அரசு ஊடகப் பிரிவான பிஐபி வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், சீதை அமர்ந்த பாறை வழங்கப்பட்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை. அந்த செய்திக் குறிப்பில் கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி வெளியிட்டிருந்த ட்வீட் பதிவுகளை இணைத்திருந்தனர். 

Archive

அதில், “இலங்கையில் இருந்து அஷ்வின் பூர்ணிமா விழாவுக்காகக் கொண்டு வரப்பட்ட புத்தரின் புனிதமான பொருட்களுக்கு சிறப்பான வழிபாட்டு வரவேற்பு வழங்கப்பட்டது. புத்த துறவிகளும் வரவேற்கப்பட்டனர்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் இருந்து சீதை அமர்ந்து தவம் செய்த பாறையை இந்தியாவிடம் வழங்கியிருந்தால் அதை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் வெளியிடாமல் இருந்திருக்க மாட்டார். மத்திய அரசு அல்லது உத்தரப்பிரதேச அரசு அதை மிகப்பெரிய விஷயமாக விளம்பரம் செய்திருப்பார்கள். அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பதால் சீதை அமர்ந்த பாறையை வழங்கினார்கள் என்ற தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Archive

தொடர்ந்து தேடிய போது மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்ட ட்வீட் பதிவு கிடைத்தது. அதில் இலங்கையில் இருந்து வந்த புத்தரின் புனித பொருட்களுக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மரியாதை செய்யும் காட்சிகள் தெளிவாக இருந்தன. அதிலும் சீதை அமர்ந்த பாறை கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிடவில்லை.

Archive

கொழும்பு நகரில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவும் நமக்குக் கிடைத்தது. அதில் அவர்கள் தமிழில் ட்வீட் செய்திருந்தர். அதில், “மற்றொரு மைல்கல்!! கொழும்பிலிருந்து குஷிநகருக்கான விமானத்தின் வருகையுடன் வஸ்கடுவ புனித கபிலவஸ்து சின்னங்களின் கண்காட்சி ஆரம்பமானது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான பேராளர்கள் குழுவினரை உத்தர பிரதேஷ் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் பலர் வரவேற்றனர்” என்று குறிப்பிட்டிருந்தனர். இலங்கை அரசு சீதை அமர்ந்த பாறையை வழங்கியது என்று அதிலும் குறிப்பிடவில்லை.

இப்படி அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு செய்தி, அறிக்கையிலும் இலங்கை அரசு சீதை அமர்ந்து தவம் செய்த பாறையை இந்தியாவிடம் வழங்கியது என்று கூறவில்லை. இவற்றின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அசோகவனத்தில் சீதை அமர்ந்து தவம் செய்த பாறையை இந்தியாவிடம் இலங்கை வழங்கியது என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சீதை அமர்ந்து தவம் செய்த பாறையை இந்தியாவிடம் வழங்கியதா இலங்கை?

Fact Check By: Chendur Pandian 

Result: False