இளமையில் வறுமையில் வாடிய மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் என்று பரவும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மைக்கா சுரங்கத்தில் வேலை செய்ததாகக் கல்லூரி மாணவிகளிடம் கூறியதாக ஒரு கதை சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெண் ஒருவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை…?

மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை. பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவள் முகத்தில் பவுடர் கூட பயன்படுத்தவில்லை.

பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. அவள் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினாள், ஆனால் அவளுடைய வார்த்தைகள் உறுதியுடன் இருந்தன. அப்போது குழந்தைகள் கலெக்டரிடம் சில கேள்விகளை கேட்டனர்.

கே: உங்கள் பெயர் என்ன?

என் பெயர் ராணி. சோயாமோய் என்பது எனது குடும்பப் பெயர். நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள்” என்று ஒரு மிக நீண்ட கதை பகிரப்பட்டுள்ளது.  கதையின் கடைசியில் மேக்கப் பொருட்கள் தயாரிக்கப்பயன்படும் மூலப் பொருள், மைக்கா சுரங்கம், மைக்கா எடுக்க குழந்தைகள் பயன்படுத்தப்படுவது என்று சமூக பிரச்னையை நோக்கி கதை செல்கிறது. 

இந்த பதிவை சாக்ரடீஸ் கு.பா. என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் ஜனவரி 27, 2022 அன்று பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் வேலை செய்து, பின்னர் படித்து ஐஏஎஸ் ஆன பெண் என்று தன்னம்பிக்கை ஸ்டோரியாக பதிவு உள்ளது. படத்தில் உள்ள பெண்மணியைப் பார்த்தால் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர் போல இல்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மலப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே 2016ம் ஆண்டு நடந்த வெடி சம்பவம் தொடர்பான செய்தியில் இந்த பெண்மணியின் படத்தை மலையாள மனோரமா பயன்படுத்தியிருந்தது தெரிந்தது. மலையாள மனோரமா செய்தி வீடியோவின் முகப்பு படமாக இந்த படத்தை அவர்கள் பயன்படுத்தியிருந்தனர். 

மலப்புரம், கலெக்டர் அலுவலகம், வெடி விபத்து ஆகிய கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடிய போது இது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன. மலையாள மனோரமா வெளியிட்டிருந்த மலையாள செய்தியை மொழி பெயர்ப்பு செய்து பார்த்த போது படத்தில் இருப்பது அப்போது மலப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த சைனாமோல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: onmanorama.com I Archive

தொடர்ந்து தேடிய போது அவர் பெயர் சைனாமோல் என்றும், அவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் என்றும், அவரது ஒரு சகோதரி ஐஏஎஸ் அதிகாரியாகவும் சகோதரர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருப்பது தெரிந்தது. இதன் மூலம் படத்தில் இருப்பவர் ராணி சோயாமோய் இல்லை என்பது உறுதியானது. 

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive

அடுத்தது ராணி சோயாமோய் என்று ஐஏஎஸ் அதிகாரிகள் யாராவது இருக்கிறார்களா, இதற்கு முன்பு மலப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றினாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருப்பதாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணைய தளத்தில் தேடிப் பார்த்தோம். அதிலும் அப்படி ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருப்பதாக நமக்குத் தகவல் கிடைக்கவில்லை.

பிறகு எப்படி இந்த செய்தி வந்தது என்று குழப்பம் ஏற்பட்டது. எனவே, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவைத் தொடர்புகொண்டு கேரளாவில் ராணி சோயாமோய் என்று ஐஏஎஸ் அதிகாரி யாராவது இருக்கிறார்களா என்று கேட்டோம். அப்போது அவர் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தன்னம்பிக்கை கதை உண்மையில்லை. சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதையை யாரோ தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் கூட கட்டுரை வெளியிட்டுள்ளோம் என்று தெரிவித்தனர். 

அந்த கட்டுரையைப் பார்த்தோம். அதில் ஹக்கீம் மெரயூர் என்பவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பில் இருந்து இந்த கதை எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும், ஹக்கீம் மெரயூர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய கதையை, உண்மையான ஐஏஎஸ் அதிகாரியின் படத்தை வைத்து தவறாக பகிர்ந்து வருவது குறித்து வேதனை பதிவை வெளியிட்டிருந்தார். அதையும் அந்த கட்டுரையில் இணைத்திருந்தனர். 

நம்முடைய ஆய்வில் படத்தில் இருப்பது ராணி சோயாமோய் இல்லை, கேரள ஐஏஎஸ் அதிகாரியான சைனாமோல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சோயாமோய் என்று எந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய கதையை உண்மையான கதை போல சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள் என்று இதை எழுதிய ஹக்கீம் அளித்திருக்கும் விளக்கம் கிடைத்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இளமையில் வறுமையில் வாடிய மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தன்னுடைய இளம் வயதில் ஜார்கண்ட் மைக்கா சுரங்கத்தில் பணியாற்றினேன் என்று கேரள பெண் ஐஏஎஸ் அதிகாரி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இளமையில் வறுமையில் வாடிய மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “இளமையில் வறுமையில் வாடிய மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் என்று பரவும் வதந்தி!

Comments are closed.