
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

எச்.ராஜாவின் ட்விட் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “பொள்ளாச்சி கற்பழிப்புகள் லவ் ஜிகாதை போன்ற மோசமான குற்றம் அல்ல. பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் வழக்கைத் திரும்பப் பெற்று இந்து தர்மத்தின் மரியாதையையும் மாண்பையும் காக்க வேண்டும்” என்று உள்ளது. இந்த ட்வீட் 2019 மார்ச் 11ம் தேதி பதிவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவைப் பாசிசம் வீழட்டும் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 மார்ச் 27ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சர்ச்சைக்குரிய கருத்துக்களை பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இதனால், அவர் பெயரில் பல போலி ட்வீட்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ட்வீட் படம் உண்மையா, போலியானதா என்று ஆய்வு மேற்கொண்டோம். இந்த ட்வீட்டில் சொல்லப்பட்ட வார்த்தைகளை ட்விட்டர் தேடலில் டைப் செய்து தேடினோம். அப்படி எந்த ஒரு ட்வீட்டும் நமக்குக் கிடைக்கவில்லை. ஒருவேளை, ட்வீட் செய்துவிட்டு எதிர்ப்பு ஏதேனும் எழுந்ததால் அகற்றிவிட்டாரோ , அது தொடர்பாக செய்தி வந்துள்ளதாக என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு இந்த ட்வீட் உண்மையா என்று கேட்டோம். எச்.ராஜா அப்படி எந்த ஒரு ட்வீட்டையும் வெளியிடவில்லை. இது விஷமிகள் பரப்பிய பொய் ட்வீட் என்றார்.
பொள்ளாச்சி தொடர்பாக எச்.ராஜா கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா என்று அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் கொடூரமானது. அதிர்ச்சி அளிக்கக் கூடியது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இதற்கென விசேஷ நீதிமன்றம் அமைத்து குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதை மார்ச் 12ம் தேதி வெளியிட்டிருந்தார். அதாவது மேற்கண்ட ட்வீட் வெளியிட்டதாக கூறப்படுவதற்கு அடுத்த நாள்.
நம்முடைய ஆய்வில், எச்.ராஜாவின் ட்வீட் பக்கத்தில் எந்த மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று எந்த ஒரு பதிவும் வெளியாகவில்லை.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவல் கிடைத்துள்ளது.
ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ட்வீட் போலியானது என்று தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி மறுத்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பொள்ளாச்சி பாலியல் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று எச்.ராஜா ட்வீட் செய்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
