தமிழகத்தின் பெயரை தக்‌ஷிணபிரதேஷ் என்று மாற்ற சம்மதித்த எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்றி கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், "உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் பரப்புரை. தமிழகத்தின் பெயரை தக்‌ஷிணபிரதேஷ் என்று மாற்ற சம்மதித்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி" என்று இருந்தது. நிலைத் தகவலில், "அடிமை பழனிச்சாமிக்கு எவ்வளவு திமிர் இருந்தா இப்படி ஆதரிச்சிருப்பான்... உன் அப்பன் நாடாடா..." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நியூஸ் கார்டை Michael Raj என்பவர் 2021 மார்ச் 31 அன்று பதிவிட்டிருந்தார். இந்த நியூஸ் கார்டை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தின் பெயரை தக்‌ஷிணபிரதேஷ் என்று மாற்றப்படும் என்று தமிழக பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. இது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இருப்பினும், தொடர்ந்து அதை வைத்து பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தின் பெயரை தக்‌ஷிணபிரதேஷ் என்று மாற்ற எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு யோகி ஆதித்யநாத் நன்றி கூறியதாகவும் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் என்பதே பொய் என்று உறுதியான நிலையில், இதற்கு எப்படி முதல்வர் பழனிசாமி சம்மதம் தெரிவிப்பார் என்ற கேள்வி எழுந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை நியூஸ் கார்டு பார்க்க அசல் போல இல்லை. இதில் உள்ள தமிழ் ஃபாண்ட் புதிய தலைமுறை வழக்கமாக பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் இல்லை. பின்னணி டிசைன் இதில் இல்லை. எனவே, புதிய தலைமுறை வெளியிட்ட அசல் நியூஸ் கார்டை தேடினோம். புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் நமக்கு அந்த நியூஸ் கார்டு கிடைத்தது.

அதில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தமிழகத்திலிருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது. பிரதமர் மோடியின் பார்வை முழுவதும் தமிழகம் பக்கமே உள்ளது" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை மாற்றி தவறான தகவல் சேர்த்திருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்ய புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனிடம் கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டுதான் என்பதை உறுதி செய்தார்.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive

கோவையில் வானதி ஶ்ரீனிவாசனை ஆதரித்து யோகி ஆதித்யநாத் பேசியதைப் பார்த்தோம். தமிழ் இந்து உள்ளிட்ட எல்லா நாளிதழ்களிலும் செய்தி வெளியாகி இருந்தது. எதிலும், தமிழகத்தின் பெயரை மாற்ற தமிழக முதல்வர் பழனிசாமி ஒப்புக்கொண்டார் என்று இல்லை. இதன் மூலம், இந்த நியூஸ் கார்டு மற்றும் தகவல் இரண்டும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உத்தரப்பிரதேசத்தைப் போல தமிழகத்தை மாற்ற பாஜக – அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி மோடி பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழகத்தின் பெயரை மாற்ற சம்மதித்த பழனிசாமிக்கு யோகி ஆதித்யநாத் நன்றி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False