FACT CHECK: ஜக்கி வாசுதேவை கஞ்சா சாமியார் என்று கூறுவதை நாராயணன் திருப்பதி கண்டித்தாரா?

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

ஜக்கி வாசுதேவை கஞ்சா சாமியார் என்பதை கண்டிக்கிறேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தவத்திரு சத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஜக்கி வாசுதேவன்ஜி @SadhguruJV அவர்களை கஞ்சா சாமியார் என்று கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று இருந்தது. 

நிலைத் தகவலில், “கஞ்சாவை சொன்னதும் சிஞ்சாக்கு கோவத்தை பாரு😂😂 அது சரிடா ஓட்டவாய் நாராயண B12 போலீஸ் ஸ்டேசனில் இவன் மீது பதியபட்ட வழக்கு பத்தி தெரியுமா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Yasin Basha என்பவர் 2021 மே 10 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பற்றி அவ்வப்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவருடைய பெயரிலேயே கொஞ்சம் திருத்தம் செய்து அவரது புகைப்படத்தை வைத்து நிறைய போலியான ட்வீட்கள் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஏற்கனவே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில் ஜக்கி வாசுதேவை கஞ்சா சாமியார் என்று சமூக ஊடகங்களில் பலரும் குறிப்பிடுவதைக் கண்டித்து நாராயணன் திருப்பதி ட்வீட் செய்ததாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். முதலில் நாராயணன் திருப்பதி ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தபோது அதில் அப்படி எந்த ஒரு பதிவும் இல்லை. எனவே, அவரது பெயரில் போலியாக இயக்கும் ட்வீட் பக்கத்தை ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive

அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவிலிருந்த ட்வீட் இருந்தது. இந்த ட்வீட் பக்கம் நாராயணன் திருப்பதியின் ட்விட்டர் பக்கம் இல்லை. இதன் முகப்பு பகுதியில் “parody” என்று குறிப்பிட்டிருந்தனர். நாராயணன் திருப்பதியின் ட்விட்டர் பெயர் மற்றும் ஐ.டி Narayanan Thirupathy @Narayanan3 என்பதாகும் இந்த போலி ட்விட்டர் கணக்கின் பெயர் மற்றும் ஐடி Narayanan Tirupati @narayatirupati3 ஆகும். இந்த போலியான ட்விட்டர் ஐடி தன்னுடையது இல்லை என்று ஏற்கனவே நாராயணன் திருப்பதி தெரிவித்திருந்தார்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive

இதன் அடிப்படையில் ஜக்கி வாசுதேவை கஞ்சா சாமியார் என்று அழைக்கக் கூடாது என்று பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி ட்வீட் வெளியிட்டதாகப் பரவும் பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாராயணன் திருப்பதி பெயரில் பரவும் ட்வீட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஜக்கி வாசுதேவை கஞ்சா சாமியார் என்று கூறுவதை நாராயணன் திருப்பதி கண்டித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False