FactCheck: 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அத்திப் பூ- உண்மை என்ன?
‘’50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அத்திப் பூவின் அரிய புகைப்படம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர் ஒருவர், +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் பகிரப்படும் புகைப்படம், முதன்முதலில், 2016ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், மிரஜ் நகரின் கோட்டைப் பகுதியில் எடுக்கப்பட்டதாகும். அங்குள்ள கோயில் ஒன்றின் அருகே, ஒரு அத்தி மரத்தில் இப்படி அரிய முறையில் பூத்திருப்பதாக, தகவல் பரவியதை தொடர்ந்து, மக்கள் ஏராளமானோர் குவிந்து, வழிபட்டுள்ளனர்.
உடனடியாக, அந்த இடத்திற்கு, மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்து, ‘’இது பூ அல்ல; பூஞ்சை மட்டுமே,’’ என்று உறுதிப்படுத்தினர்.
இதற்கடுத்தப்படியாக, நாம் அத்தி மரம் உண்மையில் பூக்குமா, அதன் பூ எப்படியிருக்கும் என விவரம் தேடினோம். இதன்பேரில் நாம் தாவரவியல் நிபுணர் ஆறுமுகம் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.
அவர், ‘’அத்தி மரத்தில் வெளிப்படையாக பூ என எதுவும் வராது; அதன் பூ என்பது கிட்டத்தட்ட இனப்பெருக்கத்திற்காக பயன்படக்கூடியது மட்டுமே; மூடிய உறையில் பார்ப்பதற்கு காய் போல இருக்கும். இதற்கு Syconium என்று பெயர். அதுவே வளர்ந்த பிறகு நாம் உண்கிற அத்திப் பழமாக மாறுகிறது. இது வளர்ந்து வெடிக்கும்போது மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஒருமுறை இந்த காய் வடிவிலான பூ தோன்றும். நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தில் இருப்பது காய்ந்த மரங்களில் வளரக்கூடிய பூஞ்சையாகும். அது பூ அல்ல,’’ என்று தெரிவித்தார்.
அத்தி மரத்தில் எப்படி மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது என்பதை விளக்கும் வரைபடம் கீழே தரப்பட்டுள்ளது.
எனவே, அத்திப் பூ என்று கூறி மேலே பகிரப்படும் புகைப்படம் உண்மையில், பூஞ்சை ஒன்றின் படம் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
Title:50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அத்திப் பூ- உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False