
‘’இமயமலையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நாரிலதா பூ; பார்க்க பெண் போலவே உள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கிலும் பலர் ஷேர் செய்வதைக் கண்டோம்.
இதன்படி, பெண் உருவில் பூ ஒன்று இமயமலையில் பூப்பதாகவும், அதன் பெயர் நாரிலதா என்றும் நம்பப்படுகிறது.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று தகவல் தேடியபோது, இப்படி எந்த பூவும் இல்லை என்று விவரம் கிடைத்தது.
அதாவது, புத்த மதத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. நாரிஃபோன் என்ற பெயரில் (பாலி மொழியில் நாரிபழா) ஹிமாஃபன் எனும் வனத்தில் அரிய வகை மரம் உள்ளதாகவும், அதில் பெண்களைப் போலவே உருவம் கொண்ட பூக்கள் பூப்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இதில் வரும் ஹிமாஃபன் எனும் வனம் கற்பனையானது. அது கந்தர்வர்களுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது. புத்தமதத்தை பரப்பும் போதிசத்துவர்கள் தியானம் செய்யும் பகுதியில் அவர்களின் மனதை குழப்பும் நோக்கில் இந்திரன் இதுபோன்ற மரங்களை நடுவது வழக்கம் என்றும், அந்த கதையில் கூறப்படுகிறது.

எனவே, புத்த மதத்தில் கற்பனையாகச் சொல்லப்படும் ஒரு கதையில் வரும் நாரிபழா என்ற மரத்தின் பெயரை நாரிலதா என்றும், ஹிமாபன் என்ற வனத்தின் பெயரை ஹிமாலயா (இமயமலை) என்றும் பெயர் மாற்றி, பலரும் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது.
இதுதவிர, கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் தாவரவியல் நிபுணர் ஆறுமுகம் என்பவரிடம் பேசினோம். அவர் இதனை பார்வையிட்ட பின், ‘’எனது அனுபவத்தில் இதுவரை இப்படியான தாவரம் உள்ளதாக நான் கேள்விப்பட்டதில்லை. பார்த்ததும் இல்லை. இதுபோன்ற செடியோ, மரமோ அல்லது பூவோ இருந்திருந்தால், அது தாவரவியல் ஆய்வு செய்வோருக்கு பாடமாகவே வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்படி எதுவும் இல்லை. பொதுவாக, பெண்ணின் மார்பு, பிறப்புறுப்பு, உதடு போன்றவற்றின் சாயலில் உள்ள பூ, செடிகள் நிறையவே நாம் காண முடியும். அவற்றை உவமைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம். ஆனால், பெண்ணின் உடல் உறுப்புதான் அது என்று கூறிவிட முடியாது. அதேபோல, முழு பெண்ணின் உடல் அமைப்பில் ஒரு பூ பூக்கும் என்பது கற்பனைக்கு அழகாக இருக்கும். ஆனால், இயற்கையில் சாத்தியமில்லை. இதுபோன்ற பொம்மையை செய்து, செடியில் தொங்குவது போல புகைப்படம் எடுத்து ஏமாற்றியிருக்கலாம் அல்லது ஃபோட்டோஷாப் செய்திருக்கலாம்,’’ என்றார்.

புகைப்படம்: ஆறுமுகம், தாவரவியல் நிபுணர்.
மேலும், குறிப்பிட்ட நாரிலதா பூ புகைப்படம், கடந்த பல ஆண்டுகளாகவே இணையத்தில் பகிரப்பட்டு வருவதாகும். சிலர் இதனை நாரில்லாத பூ என்று கூறி தகவல் பகிர்கின்றனர். இதுபற்றி 2012ம் ஆண்டில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை கீழே இணைத்துள்ளோம்.
இதில் நம்பகத்தன்மை இல்லை என ஏற்கனவே, பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
மேலும், தாய்லாந்து நாட்டில் இதுபோன்ற மரம் உள்ளதாகக் கூறி சில ஆண்டுகள் முன்பு கூட செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், அதன் மீது இதுவரை நம்பகத்தன்மை ஏற்படவில்லை.
Dailymail.co.uk Link
இறுதியாக, நமக்கு Habenaria crinifera என்ற பெயருள்ள பூச்செடி ஒன்றை பற்றி விவரம் கிடைத்தது. அது ஓரளவு பார்க்க ஒரு உருவம் போல இருந்தாலும், இந்த புகைப்படத்தில் இருப்பது போன்று பெண்ணின் அங்கங்களுடன் இல்லை. இதனையே தமிழில் நாரிலதா என்று குறிப்பிடுகின்றனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் நம்பகமானது இல்லை என்று தெரியவருகிறது.

Wikipedia Link
இதுபற்றி நமது இலங்கைப் பிரிவினர் மிக விரிவாக ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, உண்மையான நாரிலதா பூ வேறு ஒன்றாக இருக்க, கற்பனைக் கதையில் சொல்லப்படும் தகவல் ஒன்றை உண்மை போலவே திரித்து, அதற்கேற்ப வதந்தி பரப்புகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:இமயமலையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நாரிலதா?- முழு உண்மை இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False
