அயோத்தியில் கட்டிமுடிக்கப்பட்ட ராமர் கோவில் என்று பரவும் வீடியோ உண்மையா?
அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ராமர் கோவில் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அயோத்தி ராமர் கோவில் போன்று தோற்றம் அளிக்கும் அனிமேஷன் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "2024 ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் காண இருக்கும், எஅயோத்தி #ராமர்_கோவில். ராமர் கோயில் அழகை மொபைல் முழு திரையில் காணுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஜனவரி 22, 2023 அன்று குடமுழுக்கு நடைபெற உள்ள ராமர் கோவிலின் அழகான காட்சி என்று வீடியோவை பகிர்ந்துள்ளனர். வீடியோவை பார்க்கும் போதே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது. ஆனாலும் அயோத்தி ராமர் கோவில் என்று குறிப்பிட்டு பலரும் பகிரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோவின் கீழே "Shivaji Home Design, Rohit Sankhla" என்று இருந்தது. அதை அடிப்படையாக வைத்து கூகுளில் தேடினோம். அப்போது சிவாஜி ஹோம் டிசைன் என்ற யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ 2021 நவம்பர் 3ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், அயோத்தி ராமர் கோவில் 3டி அனிமேஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அனிமேஷன் வீடியோவை அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் வெளியிட்டது என்று அந்த வீடியோ பதிவில் குறிப்பிடப்படவில்லை.
அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் தரப்பிலிருந்து ஏதேனும் 3டி அனிமேஷன் வீடியோ வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். 2022 பிப்ரவரி 13ல் இப்படி ஒரு வீடியோவை ஶ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்தா ஷேத்ரா தன் எக்ஸ் தள (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருந்தது தெரிந்தது. இந்த இரண்டு வீடியோவுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதைக் காண முடிந்தது.
மேலும் தொடர்ந்து ராமர் கோவில் நிர்வாகம் சார்பில் சமூக ஊடக பக்கங்களில் வெளியாகும் ராமர் கோவில் படங்களுக்கும், இந்த வீடியோவுக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசத்தை காண முடிகிறது. மிக உயர்ந்த ராமர் சிலை அமைக்கப்பட்டது போன்று வீடியோவில் உள்ளது. ஆனால், இன்னும் அந்த சிலை கட்டப்படவில்லை.
ராமர் கோவில் நிர்வாகம் வெளியிட்டிருந்த 3டி அனிமேஷனை வெளியிட்டிருந்தால் கூட ஓரளவுக்கு நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால், ராமர் கோவில் போன்று இல்லாத, ராமர் கோவிலுக்கு தொடர்பில்லாத நபர்கள் உருவாக்கிய 3டி அனிமேஷன் வீடியோவை 2024 ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ள ராமர் கோவில் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜனவரி 22 அன்று திறக்கப்பட உள்ள அயோத்தி ராமர் கோவிலின் அழகிய தோற்றம் என்று பரவும் வீடியோ தனிநபர் ஒருவர் உருவாக்கிய 3டி அனிமேஷன் வீடியோ என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:அயோத்தியில் கட்டிமுடிக்கப்பட்ட ராமர் கோவில் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False