
கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பாரீஸ் நகரமே பற்றி எரிகிறது என்ற வகையிலும் புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போராட்டம் நடைபெறும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தப்பூசிக்கு எதிராக பற்றி எரியும் பாரீஸ்… பிரான்ஸில் மக்ரோனின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு! மேக்ரானின் புதிய சட்டத்திற்கு தினமும் அதிகரித்து வரும் கடும் எதிர்ப்பு! பிரான்சில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்டு் உள்ள சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. பிரான்சில் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
அதன் படி, மருத்துவமனை ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது. உணவகங்களுக்கோ, மது பான விடுதிகளுக்கோ செல்வோருக்கு தப்பூசி சான்றிதழ் அவசியமாகிறது. நேற்று, இந்த புதிய விதிகளை எதிர்த்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மருத்துவமனை ஊழியர்களும், உணவக உரிமையாளர்களும், பெற்றோர்களும் பேரணிகளில் ஈடுபட்டனர். சுதந்திரம், சுதந்திரம் என முழங்கிய்படி பேரணி முன்னோக்கி செல்ல, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகள் பலவற்றை வீசினர். தங்கள் மீது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை எதிர்ப்பாளர்கள் காலால் உதைத்து போலிசாரை நோக்கி தள்ளி விட, தலைநகரம் போர்க்களம் போல் ஆனது.
அத்துடன், ஆகஸ்ட் மாதம் முதல், மேலும் விரிவாக்கம் செய்யப்படும் விதிகளின் படி, உணவகங்களுக்கோ, மதுபான விடுதிகளுக்கோ செல்வோர் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் செல்வோர், பொதுப் போக்குவரத்தை பயன் படுத்துவோர் என அனைவருக்குமே தப்பூசி பெற்றதற்கான ஆதாரம் அல்லது பிசிஆர் முறையில் செய்யப்பட்ட பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரம் அவசியம் என்ற விதியும் அறிமுகம் ஆக உள்ளது.
அது மட்டும் இன்றி, செப்டம்பர் 15 முதல் மருத்துவமனை ஊழியர்கள், முதியோர் இல்ல ஊழியர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியும் அறிமுகம் ஆக உள்ளது. அப்படி தடுப்பூசி பெற்றுக் கொள்ள மறுப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டு உள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்துத்தான் மக்கள் பேரணிகளில் இறங்க, பேரணிகள் போராட்டமாக வெடித்து, வாகனங்களுக்கு தீவைக்கப் பட, பாரீஸ் பற்றி எரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது! இதனால் மக்களை கட்டுப்படுத்த மூன்றாவது அலையை பெருக்கி மக்களை நசுக்கும் திட்டமிடலும் அங்கு நடந்து வருகிறது. தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். தவறாமல் பகிர்வோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Balasubramania Adityan T என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூலை 16ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உலகம் முழுக்க கொரோனா பரவல் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி வந்தாலும் அதை குறிப்பிட்ட குறைந்த சதவிகித மக்கள் எதிர்க்கின்றனர். அதே போன்று பிரான்சிலும் கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு உள்ளது. அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு ஹெல்த் பாஸ் வழங்கப்படும், சமீபத்தில் கொரோனா நெகட்டிவ் வந்தவர்கள் ரெஸ்டாரண்ட், பார், பப் போன்ற பொது இடங்களுக்கு வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசு கொண்டுவந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: reuters.com I Archive
ஜூலை 15ம் தேதி பாரீஸ் நகரில் நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூலை 18ம் தேதி நாடு முழுக்க ஒரு லட்சம் பேர் போராட்டம் நடத்தியதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன. எனவே அந்த தகவல் தொடர்பான ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. அதே நேரத்தில் பாரீஸ் நகரம் பற்றி எரிகிறது என்று பகிரப்பட்டுள்ள படம் கொரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதா என்று நாம் ஆய்வு செய்தோம்.
கூகுளில் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பிரான்ஸ் நாட்டில் நடந்த மஞ்சள் சட்டை போராட்டம் (Yellow vests protests) என்று குறிப்பிட்டு சில முடிவுகளை கூகுள் நமக்கு காட்டியது. அவற்றை ஒவ்வொன்றாக தேடிப் பார்த்தோம். அப்போது REUTERS இந்த படத்தை எடுத்திருப்பதும், இது தொடர்பான செய்தியை அது வெளியிட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்த புகைப்படம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி பிரான்சில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பொது மக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம் ஆகும். கொரோனா தொற்று 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில்தான் பரவத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அசல் பதிவைக் காண: reuters.com I Archive
பிரான்ஸ் மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா என்று பார்த்தோம். அந்த நாடு 6.32 கோடி டோஸ் பெற்றுள்ளது. 2.71 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது பிரான்ஸ் நாட்டு மக்கள் தொகையில் 40 சதவிகிதம் ஆகும்.
பிரான்சில் கொரோனா தடுப்பூசி போட்டால்தான் பார், பப் போன்ற இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட புதிய விதிமுறையை அந்நாட்டு அரசு பிறப்பித்தது உண்மைதான். இதை எதிர்த்து மக்கள் போராடி வருவதும் உண்மைதான். ஆனால், பற்றி தடுப்பூசி காரணமாக எரியும் பாரீஸ் என்று பகிரப்படும் படம் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இது உண்மையான தகவலுடன் தவறான படம் வைத்து பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பற்றி எரியும் பாரீஸ் என்று பகிரப்படும் படம் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பற்றி எரியும் பாரீஸ் என்று பரவும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
