
10-ம் வகுப்பில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பா.ஜ.க-வினர் பதில் பெற்றுள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
| Facebook Link | Archived Link |
பாலிமர் செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போல உள்ளது. அதில், “தி.மு.க தலைவர் ஸ்டாலின் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பா.ஜ.க-வினர் கேட்ட கேள்விக்கு தமிழக அரசு பதில்” என்று உள்ளது.
இந்த செய்தியை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி எப்போது வெளியிட்டது என்று குறிப்பிடவில்லை.
இந்த பதிவை, ஸ்ரீ நித்ய வீர பத்ரானந்தா என்பவர் 2019 செப்டம்பர் 16ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாலிமர் தொலைக்காட்சி பெயரில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், வழக்கமாக பாலிமர் தொலைக்காட்சி வெளியிடும் நியூஸ் கார்டு போல இது இல்லை. ஒட்டி, வெட்டி நிறைய வேலை செய்து வெளியிட்டது போல இருந்தது. ஃபாண்டும் வித்தியாசமாக இருந்தது. இதனால், இந்த செய்தியை பாலிமர் செய்தி வெளியிடவில்லை என்று தெரிந்தது.
இருப்பினும் இதை உறுதி செய்ய, பாலிமர் தொலைக்காட்சியின் இணையதள பக்கத்தில் சென்று ஆய்வு செய்தோம். “பத்தாம் வகுப்பில் ஸ்டாலின் தோல்வி” என்று செய்தி ஏதும் வெளியிட்டுள்ளார்களா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
மு.க.ஸ்டாலின் பள்ளிப் படிப்பு பற்றி வேறு யாரும் செய்தி வெளியிட்டுள்ளார்களா என்று தேடினோம். அப்போது இணையதளம் ஒன்றில் முகைப்பூர் ஜெயப்ரகாசம் என்பவர் கூறியதாக ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தனர். யார் அவர், எங்கே கூறினார் என்று எந்த ஒரு தகவலும் இல்லை. முகைப்பூர் முனைவர் ஜெயப்ரகாசம் கூறினார் என்று மட்டுமே உள்ளது, அது தொடர்பாக இணைப்பு ஏதும் இல்லை.
மு.க.ஸ்டாலின் படத்துடன் மதிப்பெண் பட்டியல் போன்ற படம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஹீப்ரூ, ஜெர்மன் என்று வருகிறது. இதன் மூலம் போலியாக மதிப்பெண் பட்டியல் போன்று ஒன்றை உருவாக்கியது உறுதியாகிறது.
| Article Link | Archived Link |
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பா.ஜ.க-வினர் கேட்டதாக இதில் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக யாராவது ஆர்.டி.ஐ-யில் கேட்டார்களா என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். முதலில், இணை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்படி எதுவும் நாங்கள் அளிக்கவில்லை… அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநரிடம் கேட்டால் அவர் விளக்கம் அளிப்பார், என்றனர்.
இதைத் தொடர்ந்து அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநரைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “மு.க.ஸ்டாலின் மதிப்பெண் பட்டியல் தரும்படி ஆர்.டி.ஐ-யில் யாரும் கேட்கவில்லை. அப்படியே மூன்றாவது நபர் கேட்கும்போது எல்லாம் தகவல் அளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட நபர், அவர் சார்ந்த பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் விண்ணப்பித்தால், தகுதி இருப்பின் அது பற்றி பரிசீலனை செய்து வழங்கப்படும். சம்பந்தமே இல்லாத ஒருவர் மற்றொருவரின் மதிப்பெண் பட்டியல் வேண்டும் என்று கேட்டால் அதை எல்லாம் நாங்கள் கொடுப்பது இல்லை” என்றனர்.
இதுதவிர மு.க.ஸ்டாலின் சென்னை மாநில கல்லூரியில் 1973ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
நம்முடைய ஆய்வில்,
பாலிமர் செய்தி தொலைக்காட்சி பெயரில் போலியாக நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.
மு.க.ஸ்டாலின் மதிப்பெண் பட்டியல் தொடர்பாக எந்த ஒரு செய்தி ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.
ஒரு ஊடகம் மட்டும் போலியான மதிப்பெண் பட்டியலை வைத்துப் பதிவிட்டது உறுதியாகி உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் மதிப்பெண் பட்டியலை வழங்கவில்லை… மூன்றாவது நபருக்கு வழங்கவும் முடியாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், 10ம் வகுப்பு தேர்வில் தமிழில் மு.க.ஸ்டாலின் தேர்ச்சிபெறவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றதாக வெளியான செய்தி பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:10-ம் வகுப்பில் ஸ்டாலின் தோல்வி: ஆர்டிஐ பெயரில் பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


