சென்னையில் கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாக கூறி மயக்கமடையச் செய்து நகை திருடிச் சென்றதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பத்திரிக்கை ஒன்றில் வந்த செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். அதில், "இப்படியும் நடக்குது கொள்ளை உங்க வீட்டுக்கும் வரலாம், உஷார்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. செய்தியின் உள்ளே, "சென்னை திருமுல்லைவாயலைச் சார்ந்த போலீஸ்காரர் வீட்டில் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. பிபிஇ உடை அணிந்து வந்த ரண்டு பேர் கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளோம் என்று போலீஸ்காரரின் மனைவியிடம் கூறியுள்ளனர். அவரும் பரிசோதனை செய்ய முன்வந்த நிலையில், அவரது மூக்கில் குச்சியை வைத்துள்ளனர். இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். சுயநினைவுக்கு வந்து பார்த்த போது வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது" என்று இருந்தது.

நிலைத் தகவலில், "குரானா பயன்படுத்தி திருட வந்தட்டாங்க கேட்கவே வேதனை யாரைத்தான் நம்புவதோ இந்த உலகத்திலே தெரியலே" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Senthil Ganesh Rajalakshmi என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Rthilaga என்பவர் 2021 மே 30ம் தேதி பதிவிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

Dr.நல்வினை விஸ்வ ராஜு வழக்கறிஞர் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Advocates Nithya Nithya என்பவர் இதே ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டிருந்தார். நிலைத் தகவலில், "திருடன் கிட்டவே திருடிய பலே கில்லாடிகள். Technical திருட்டில் தமிழ் நாட்டை அடிச்சிக்க முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களிடம் கவனமாக இருங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலரும் இதை பதிவிட்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்கள் எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் அளவுக்கு பதிவு இருந்தது. இதன் காரணமாக கொரோனா பரிசோதனை மற்றும் ஆய்வை பலரும் தவிர்க்கும் சூழல் உருவாகலாம். எனவே, உண்மையில் கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாக கூறி கொள்ளையடிக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

மே மாத இறுதியில் திருமுல்லைவாயலில் போலீஸ் குடியிருப்பில் கொள்ளை சம்பவம் நடந்ததாக செய்தி வெளியானது. விசாரணையில் கொள்ளை சம்பவம் நடைபெறவில்லை, கொள்ளை நடந்ததாக காவலர் ஒருவரின் மனைவி நாடகமாடியது தெரியவந்தது என்று செய்தி வெளியானது. எனவே, அந்த செய்தியைத் தேடி எடுத்தோம்.

அசல் பதிவைக் காண: news18.com I Archive

முதலில் நகை கொள்ளை போன செய்தியை தேடி எடுத்தோம். எல்லா முன்னணி ஊடகங்களும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தன. போலீஸ் குடியிருப்பிலேயே நகை கொள்ளை போனது மிகப்பெரிய செய்தியாக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து நகை திருட்டு நாடகம் தொடர்பான செய்தியை கூகுளில் தேடினோம்.

தினமலரில் 2021 மே 26ம் தேதியிட்டு செய்தி வெளியான செய்தி நமக்கு கிடைத்தது. அதில், நகை, பணம் திருடு போனதாக போலீஸ்காரர் மனைவி நாடகம் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். விகடனில் "சென்னை: கொரோனா பரிசோதனை; மயக்க மருந்து - காவலர் மனைவியின் கொள்ளை நாடகம் அம்பலமானது எப்படி?" என்று விரிவாக செய்தி வெளியிட்டிருந்தனர். " தன்னுடைய நகைகளையும் பணத்தையும் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் கொடுத்திருப்பதாகவும், நகை, பணத்தை கணவர் கேட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் கொள்ளைப் போனதாக நாடகமாடியதாகவும் உறவினர் ஒருவரிடம் தெரிவித்திருக்கிறார் சந்திரலேகா.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive 1 I vikatan.com I Archive 2

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரலேகாவின் உறவினர், இந்தத் தகவலை தர்மராஜிடம் தெரிவித்தார். பின்னர் அவர் சந்திரலேகாவைக் கண்டித்ததோடு திருமுல்லைவாயில் போலீஸாரிடம் விவரத்தைக் கூறி மன்னிப்பு கேட்டார். இதையடுத்து போலீஸார் சந்திரலேகாவை எச்சரித்து அனுப்பினர்" என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் கொள்ளை சம்பவம் நடைபெறவில்லை என்பது உறுதியானது. உறவினரிடம் கொடுத்த நகை திரும்ப கிடைக்காததால் கணவனுக்கு பயந்து அந்த பெண் நாடகம் நடத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நகைக் கொள்ளை செய்தி முதலில் மே 24ம் தேதி வெளியானது. மே 26ம் தேதியே கொள்ளை சம்பவம் எதுவும் நடைபெறவில்லை, காவலரின் மனைவிதான் நாடகமாடியுள்ளார் என்ற விவரம் வெளியாகிவிட்டது. அதுவும் எல்லா ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது. அதன் பிறகும் கூட கொரோனா பரிசோதனை என்ற பெயரில் வீடுகளில் கொள்ளை அடிக்கும் சம்பவம் நடந்து வருகிறது என்று தவறான தகவலை ஏதோ ஒரு அச்சு ஊடகம் மே 27ம் தேதி வெளியிட்டுள்ளது. அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னணி ஊடகங்களின் இ-பேப்பர்களை ஆய்வு செய்தோம். அதில் இப்படியான செய்தி எதுவும் இல்லை. எந்த ஊடகம் இதை வெளியிட்டது என்று தெரியவில்லை. நகை திருடு போனதாக போலீஸ்காரரின் மனைவி நாடகம் ஆடினார் என்ற செய்தி மே 26ம் தேதியே வெளியான நிலையில், அது தெரியாமல் 27ம் தேதி வெளியான செய்தியில் நகை திருட்டு என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மை என்ன என்று தெரியாமல் பலரும் கொரோனா பரிசோதனைக்கு என்று வந்தால் உஷாராக இருங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் இந்த செய்தி தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் உண்மையும் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கொரோனா பரிசோதனை செய்ய வந்திருப்பதாக கூறி காவலர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதாக செய்தி வெளியானது உண்மைதான்… ஆனால், கணவனுக்கு பயந்து மனைவி நாடகமாடிய செய்தியும் வெளியாகி உள்ளது. இது தெரியாமல் வீடுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வந்தால் ஜாக்கிரதை என்று தவறான எச்சரிக்கை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter

Avatar

Title:கொரோனா பரிசோதனை என்று கூறி வீட்டில் திருட்டா?- உண்மை அறிவோம்

Fact Check By: Chendur Pandian

Result: False