
‘’பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், திமுகவைச் சேர்ந்த ஆர்எஸ் பாரதியின் உறவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த தகவலை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
சென்னையை சேர்ந்த பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலன் என்பவர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Indian Express Link I DTNext Link
இத்தகைய சூழலில், கைது செய்யப்பட்ட ராஜகோபாலன், திமுகவைச் சேர்ந்த ஆர்எஸ் பாரதியின் உறவினர் என்று கூறி சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது தவறான தகவல் என்று ஆர்எஸ் பாரதி மறுப்பு கூறியுள்ளதோடு, இந்த தகவலை முதலில் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவர் மீது போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த உண்மை தெரியாமல், அதிமுக ஆதரவு கருத்துகளை பகிரும் ஆஸ்பையர் சுவாமிநாதன் என்பவர், முதலில் இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துவிட்டு, பின்னர் நீக்கிவிட்டார். எனினும், மற்றவர்கள், அவரது பதிவை ஸ்கிரின்ஷாட் எடுத்து, உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர். அதனையே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவிலும், பகிர்ந்திருக்கின்றனர்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட தகவலை ஆர்எஸ் பாரதி மறுத்திருக்கிறார். அவர் சார்பாக, திமுக போலீசில் புகார் அளித்தும் உள்ளது. இதனை முதலில் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த நபர், பின்னர் இதனை அகற்றிவிட்டார். அதேபோல, ட்விட்டரில் பகிர்ந்தவர்களும் நீக்கிவிட்டனர். ஆனாலும், சிலர் இதனை உண்மை என நம்பி இன்றளவும் ஷேர் செய்து வருகிறார்கள் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆர்எஸ் பாரதி உறவினர் என்று பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: False
