“மோடியை தொடுங்க” என்று கிறிஸ்தவ போதகர் ஜெபம் செய்ததை “கொல்லுங்க” என்று மாற்றி பரப்பிய விஷமிகள்!

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

மோடி, அமித்ஷா, மு.க.ஸ்டாலினை கொல்ல வேண்டும், அயோத்தியில் ராமர் கோவிலை இடிக்க வேண்டும் இயேசுவே என்று கிறிஸ்தவ மத போதகர் பிரார்த்தனை செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் ஜெபம் செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமரைக் கொல்லுங்க.. அமித்சாவைக் கொல்லுங்க… நிர்மலா சீத்தாராமனைக் கொல்லுங்க .. மு..க..ஸ்டாலினைக் கொல்லுங்க … யோகி ஆதித்யனாத்தைக் கொல்லுங்க….

சர்ச்சில் இப்படிப் பேசும் அல்லேலூயா குருப்! தமிழ்நாட்டில் கொலை & கலவரத்தைத் தூண்டும் சர்ச்சை மூடி, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமா அரசு…? *பாட்டிக்கு* தனிப்படை அமைக்கும் அரசு *பாஸ்டரை* பிடிக்குமா?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மற்றொரு பதிவில், “”இயேசுவே! தயவு செய்து நரேந்திர மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், யோகி ஆதித்யநாத் மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோரைக் கொல்லுங்கள்! அயோத்தியில் ராமர் கோவிலை இடித்து தேவாலயம் கட்ட எங்களுக்கு வலிமை கொடுப்பா இயேசுவே!” என்று தேவாலயத்தில் ஒரு போதகர் ஜெபிக்கிறார்! இது பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர்கள் மற்றும் தேசப் பாதுகாப்புக்கு நேரடியான மரண அச்சுறுத்தல்! @tnpoliceoffl @Uppolice மற்றும் @NIA_India உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களைக் கொல்ல வேண்டும் என்று இயேசுவிடம் கிறிஸ்தவ மத போதகர் ஜெபம் செய்தது போன்று பலரும் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். முதலில் தமிழ் தெரியாத வட இந்தியர்கள் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர். தற்போது, தமிழ் தெரிந்த தமிழகத்தைச் சேர்ந்த தீவிர வலதுசாரி ஆதரவாளர்களும் கூட இந்த வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோவை பார்த்தால் எந்த இடத்திலும் கொல்ல வேண்டும் என்று மத போதகர் கூறியது போல இல்லை. எம்.பி, எம்.எல்.ஏ-க்களை ரட்சியுங்க, பிரதமர் மோடியை தொடுங்க என்று தான் அவர் கூறுகிறார். அயோத்தியில் ராமர் கோவிலை இடிக்க வேண்டும் என்று அவர் கூறியது போன்று எந்த இடத்திலும் இல்லை. அயோத்தியில் ஜீவனுள்ள தேவன் இயேசுங்கிறதை நிரூபிச்சிக் காட்டுங்கப்பா” என்று கூறுகிறார். தொடுங்க என்பது பொதுவாக கிறிஸ்தவ மத போதர்கள் ஜெபிக்கும் முறைதான்.

Archive

இந்த வீடியோவில் எந்த இடத்திலும் தவறான, வன்முறையைத் தூண்டும் வகையிலான சொற்களை அந்த போதகர் பயன்படுத்தவில்லை என்பது வீடியோவை முழுமையாக கண்ட பிறகு உறுதியாகிறது. இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று அந்த தகவலையும் பதிவிட்டவர்கள் அளிக்கவில்லை. இந்த வீடியோ தொடர்பாக தேடினோம். 2024 ஜனவரியிலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.

ஆனால், வீடியோவில் உள்ள போதகர் யார், எந்த ஊரைச் சார்ந்தவர் என்பதை அறிய முடியவில்லை. ஒருவேளை வீடியோவில் ஆடியோவை எடிட் செய்து “கொல்லுங்கப்பா” என்று மாற்றியிருந்தால் விரிவாக ஃபேக்ட் செக் செய்திருக்கலாம். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ஆடியோ மிகத் தெளிவாக உள்ளது. தொடுங்கப்பா என்று அவர் கூறியதை கொல்லுங்கப்பா என்று கூறியதாக இவர்களாக விஷமத்தனமாக பகிர்ந்துள்ளனர். குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வன்முறை, வெறுப்பை ஏற்படுத்த வகையில் இவர்கள் பதிவுகள் உள்ளது.

Archive

இந்த வீடியோ தொடர்பாக தேடிய போது, தமிழ்நாடு ஃபேக்ட் செக் வெளியிட்டிருந்த பதிவு கிடைத்தது. அதிலும், தொடுங்கப்பா என்று கூறியதை தவறாகப் பகிர்ந்துள்ளனர் என்றே குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு விஷமத்தனமானது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரதமர் மோடி, அமித்ஷா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொட்டு அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இயேசுவிடம் கிறிஸ்தவ போதகர் ஜெபித்த வீடியோவை கொல்லுங்க என்று ஜெபம் செய்ததாக தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“மோடியை தொடுங்க” என்று கிறிஸ்தவ போதகர் ஜெபம் செய்ததை “கொல்லுங்க” என்று மாற்றி பரப்பிய விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False