
கேரளா மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மாநில அரசு குறைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்த் திரைப்பட காட்சி ஒன்றுடன் கூடிய புகைப்பட பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு. பெட்ரோல் விலை ரூ.6.67, டீசல் விலை ரூ.12.33 குறைத்து மாநில அரசு உத்தரவு. புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி 7 ரூபாய் குறைப்பு – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு. பெட்ரோல் விலை லிட்டருக்கு 94.94க்கும், டீசல் வலை ரூ.83.58-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு: சார் தூங்கிட்டான் சார்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை I Support H.Raja என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 நவம்பர் 4ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்து வரும் சூழலில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே சென்றது. இதனால் நாடு முழுவதும் அதிருப்தியான சூழல் நிலவியது. இந்த சூழலில் மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியில் ரூ.5ம், டீசல் மீதான வரியில் ரூ.10ம் குறைத்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சொல்லி வைத்தது போல் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் மாநில அரசுகள் தங்கள் தரப்பில் இருந்து வரியைக் குறைத்து அறிவிப்பை வெளியிட்டன. இதனால், பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது. இருப்பினும் விலை இன்னும் அதிகமாகத்தான் உள்ளது.
இந்த சூழலில் கேரளா, புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கு மாநில வரி விதிப்பிலிருந்து விலை குறைத்து அறிவித்தது போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive 1 I business-standard.com I Archive 2
கேரள அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்ததா… அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. ஆனால், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடியாது என்று கேரள மாநில நிதியமைச்சர் பாலகோபாலன் கூறியதாக செய்திகள் கிடைத்தன. இது தொடர்பாக பாலகோபாலன் கூறுகையில், “ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது ரூ.30 அளவுக்கு சிறப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது. தற்போது பெட்ரோல் மீது விதிக்கப்பட்ட சிறப்பு வரியில் இருந்து ஆறில் ஒரு பங்கைத்தான் மத்திய அரசு குறைத்துள்ளது. டீசலைப் பொறுத்தவரையில் சிறப்பு வரிவிதிப்பில் இருந்து மூன்றில் ஒரு பங்கைக் குறைத்துள்ளது. கேரள அரசு கடந்த ஆறு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக வரி விதிக்கவில்லை. பல மாநிலங்கள் கொரோனா காலத்தில் கொரோனா தொற்று வரியை விதித்தன. ஆனால், கேரள அரசு அப்படி செய்யவில்லை. இதனால், பெட்ரோல், டீசல் மீதான மாநில வாட் வரியை குறைக்க முடியாது” என்று கூறியதாக செய்திகள் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: pib.gov.in I Archive 1 I hindutamil.in I Archive 2
மத்திய அரசின் பிஐபி வெளியிட்டிருந்த செய்தியில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியைக் குறைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி நவம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது. அதாவது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு பதிவிடப்பட்ட 4ம் தேதிக்கு அடுத்த நாள் இந்த செய்தி வெளியாகி இருந்தது.
அடுத்து புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வாட் வரி தலா ரூ.7 குறைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தோம். இது தொடர்பான செய்தியை தேடி எடுத்தோம். அப்போது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் ரூ.7ஐ யூனியன் பிரதேச அரசு குறைத்திருப்பது உண்மை என்று தெரியவந்தது.
நம்முடைய ஆய்வில்,
கேரளாவில் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்ததாகப் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைத்திருப்பது உண்மை என்று உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது உறுதியாகிறது.
முடிவு:
கேரள அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பெட்ரோல் – டீசல் மீதான வரியை குறைத்ததா கேரள அரசு?
Fact Check By: Chendur PandianResult: Partly False
