ஐதராபாத் வந்த பிரதமர் மோடியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை மற்றும் அவரது டிரைவர் என இரண்டு பேர்தான் வரவேற்றார்கள் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

பிரதமர் மோடியை தமிழிசை சௌந்திரராஜன் வரவேற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "என்னடா இது நாட்டோட பிரதமருக்கு வந்த சோதனை .. ?? தெலுங்கானாவுல கால வச்சவுடனே வரவேற்தது இரண்டே பேர் ..ஒன்னு நம்ம தமிழிசையும் இன்னொன்னு அவங்க டிரைவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Blue coffee என்ற ட்விட்டர் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 3ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உண்மை அறிவோம்:

ஐதராபாத்துக்கு வந்த பிரதமர் மோடியை தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவரது டிரைவர் என இரண்டு பேர் மட்டுமே வரவேற்றார்கள் என்று புகைப்படம் மற்றும் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்-ல்லும் கூட பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது ஜூலை 2, 2022 அன்று பிரதமர் மோடி ஐதராபாத் வந்த போது எடுக்கப்பட்ட படம் என்று தெரிந்தது. பிரதமர் மோடியை வரவேற்ற தமிழிசை என்று குறிப்பிட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தமிழிசை அருகில் இருப்பவர் பற்றிய விவரம் இல்லை. அதே நேரத்தில் செய்தியினுள் தெலங்கானா அமைச்சர் வரவேற்றார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஜூலை 2, 2022 அன்று ஐதராபாத் நகருக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க வந்தவர்கள் யார், யார் என்று அது தொடர்பாக வெளியான செய்தியைத் தேடினோம். அப்போது, தெலங்கானா மாநில அரசு சார்பில் அம்மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக உள்ள தலசனி சீனிவாஸ் யாதவ் வந்தார் என்று குறிப்பிட்டு செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive

தொடர்ந்து தேடிய போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அந்த ட்வீட் பதிவில், "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவில் பங்கேற்பதற்காக ஐதராபாத் வந்து சேர்ந்தேன். இந்த கூட்டத்தில் கட்சியை மேலும் வலிமைப்படுத்துவது மற்றும் பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்க உள்ளோம்" என்று மோடி குறிப்பிட்டிருந்தார். மேலும், ஏராளமானோர் பிரதமர் மோடியை வரவேற்ற படத்தையும் பதிவிட்டிருந்தார்.

Archive

அடுத்து படத்தில் தமிழிசை சௌந்திரராஜன் அருகில் இருக்கும் நபர் தெலங்கானா அமைச்சர் தலசனி சீனிவாஸ் யாதவா என்று பார்த்தோம். பிரதமர் மோடியை வரவேற்ற ஆளுநர் தமிழிசை மற்றும் அமைச்சர் தலசனி சீனிவாஸ் யாதவ் வரவேற்றனர் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். மேலும் தலசனி சீனிவாஸ் யாதவ் எப்படி இருப்பார் என்று அறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் தமிழிசை அருகில் நிற்பது அவர்தான் என்பது உறுதியானது.

இதன் மூலம் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஐதராபாத் வரவில்லை, கட்சியின் தேசிய செயற்குழுவில் பங்கேற்பதற்காக அவர் வந்துள்ளார். அவரை தமிழிசை சௌந்திரராஜனும் அவரது டிரைவரும் வரவேற்றார்கள் என்று கூறுவது தவறு. தெலங்கானா அமைச்சர் வரவேற்றுள்ளார். தெலங்கானா அமைச்சரை தமிழிசையின் டிரைவர் என்று தவறாகக் குறிப்பிட்டு பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் ஐதராபாத் வந்த மோடியை தமிழிசையும் அவரது டிரைவரும் மட்டும் வரவேற்றார்கள் என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஐதராபாத்துக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க தமிழிசை மற்றும் அவரது டிரைவர் தவிர வேறு யாரும் வரவில்லை என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஐதராபாத் வந்த மோடியை தமிழிசை மற்றும் அவரது டிரைவர் மட்டுமே வரவேற்றார்களா?

Fact Check By: Chendur Pandian

Result: Partly False