பொதுவாக கார், பைக், பஸ் போன்ற சாலை போக்குவரத்துக்கு பயன்படும் வாகனங்களைத் தள்ளி ஸ்டார்ட் செய்வார்கள். ஆனால், ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரயில் பெட்டிகளை மக்கள் தள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "அடேய்......ரயிலேய தள்ளி ஸ்டார்ட் பன்னற லெவெலுக்கு போய்டிச்சா...ஆதானிக்கு எழுதி குடுக்குற வரைக்கும் விடமாட்டானுங்க போல..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Tenkasi Azeez என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த பதிவை 2023 ஜூலை 10ம் தேதி பதிவிட்டிருந்தார்.

Archive

ட்விட்டரில் இதே வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். Jasmine Fernando என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் இதை 2023 ஜூலை 10ம் தேதி பதிவிட்டிருந்தார். நிலைலத் தகவலில், "நமது மாண்பு மிகு அஷ்வினி வைஷ்ணவ்! ரயில்வே அமைச்சராக இருக்கின்ற இந்த பொற்காலத்தில்! வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸ் மட்டும்தான் தேவை! மற்ற ரெயில்கள் வேஸ்ட்!

நின்னுபோன ரயிலை 100பேர் சேர்ந்து தள்ளி ஸ்டார்ட் பண்றது மோடியோட சாதனை!அம்ரித் கால்! சாரி! கர்த்தவ்ய கால்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

நின்று போன ரயிலை பொது மக்கள் தள்ளி ஸ்டார்ட் செய்ததாக வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மத்திய அரசின் பிஐபி ஃபேக்ட் செக் இந்த படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டிருப்பது தெரிந்தது. இந்தியில் வெளியான பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், "ரயிலை ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தள்ளி புறப்பட வைத்தனர் என்று சமூக ஊடகங்களில் இந்த வீடியோ தவறாக பகிரப்பட்டு வருகிறது. 12703 ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்ட போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. ரயிலில் தீவிபத்து ஏற்பட்ட போது மற்ற பெட்டிகளில் தீ பரவாமல் தடுக்க மற்றொரு ரயில் இன்ஜின் அனுப்பப்பட்டது. ரயில் இன்ஜின் வரும் வரை காத்திருக்காமல் தீப்பிடித்த பெட்டியுடன் இணைப்பில் இருந்த மற்ற பெட்டிகள் தனியாக பிரிக்கப்பட்டு மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

இதன் அடிப்படையில் தேடிய போது, சில தினங்களுக்கு முன்பு தெலங்கானவில் ஏற்பட்ட ரயில் தீ விபத்தின் வீடியோ இது என்பது தெளிவானது. ரயிலில் முதலில் 2 பெட்டிகளிலிருந்து புகை வந்துள்ளது. உடனடியாக பயணிகள் ரயிலை நிறுத்தி வெளியே குதித்துள்ளனர். அதற்குள்ளாக மேலும் 6 பெட்டிகளில் பரவியுள்ளது. ரயில் ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீ விபத்து ஏற்பட்ட பெட்டிகளை மட்டும் தனியாக கழற்றி பின்னால் தள்ளிச் சென்றுள்ளனர். இதன் மூலம் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது என்று செய்திகள் கூறுகின்றன.

உண்மைப் பதிவைக் காண: deccanchronicle.com I Archive 1 I oneindia.com I Archive 2 I ndtv.com I Archive 3

எஸ்4 கோச்சில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது எஸ் 2 முதல் எஸ் 6 வரையிலான பெட்டிகளுக்கு பரவியது. இது தவிர இரண்டு பெட்டிகளில் லேசாக தீ பரவியுள்ளது. உடனடியாக அது அணைக்கப்பட்டுள்ளது. மற்ற பெட்டிகள் பாதுகாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. தெலங்கானா டிஜிபி வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில், "மொத்தம் 18 பெட்டிகளில் 11 பெட்டிகள் பிரிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏழு பெட்டிகளில் தீ பரவியது... அதில் மூன்று பெட்டிகள் முழுவதும் எரிந்தவிட்டது" என்று குறிப்பிட்டிருந்தார்.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவிலேயே ரயிலில் புகை மூட்டமாக இருப்பதை காணலாம். மேலும், தீவிபத்தில் இருந்து ரயில் பெட்டிகளை காப்பாற்ற பெட்டிகளை தள்ளும் பாதுகாப்பு படை வீரர்கள் என்று சில ஊடகங்களிலும் இந்த வீடியோ வெளியாகி இருப்பதை காண முடிந்தது. சில வீடியோக்களில் பாதுகாப்பு காரணமாக தனியாக கழற்றப்பட்ட பெட்டிகள், தனியாக நிற்பதையும் காண முடிந்தது.

ரயில் விபத்து ஏற்பட்டதால், மற்ற பெட்டிகளை காப்பாற்ற மற்றொரு ரயில் இன்ஜின் சம்பவ இடத்துக்கு விரைவாக அனுப்பப்பட்டது. ஆனால், அந்த இன்ஜின் வரும் வரை மற்ற பெட்டிகள் தீயில் இருந்து தப்ப முடியாது என்பதால், இன்ஜின் வரும் வரை காத்திருக்க முடியாத என்பதால் ரயில்வே மற்றும் பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் ரயில் பெட்டிகளை பின்னால் தள்ளினர் என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் பதிவிட்டுள்ளார்.

Archive

இதன் மூலம் ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்யவில்லை. தீ விபத்தின் போது மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் இருக்க பெட்டி கழற்றி தள்ளிவிடப்பட்டது என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தெலங்கானா ரயில் விபத்தின் போது தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் தடுக்க ரயில் பெட்டிகளை பொது மக்கள், பாதுகாப்பு படையினர் தள்ளிய வீடியோவை, ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்தார்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False