
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்-ன் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கட்டிடம் ஒன்று வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மீது மொசாட் (Mosad) என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “உலகின் நம்பர் ஒன் உளவு அமைப்பான, சங்கிகள் கொண்டாடிய “மொசாட்” தலைமையகம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேலின் ராணுவ தலைமையகம், விமானப்படைத் தளங்கள் உள்ளிட்ட இடங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேல் ராணுவ கட்டிடம் சேதமடைந்தது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் மொசாட் அலுவலகம் தாக்கப்பட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: mossad.gov.il I Archive
மொசாட் என்பதை ஆங்கிலத்தில் MOSSAD என்று எழுதுவார்கள். ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ஒரு எஸ் இல்லாமல் Mosad என்று எழுதப்பட்டிருந்தது. எனவே, இந்த புகைப்படம் உண்மையானதாக இருக்காது என்பது தெளிவானது. இதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம். முதலில் Mosad அல்லது Mossad எது சரி என்பதை உறுதி செய்துகொள்ள அதன் இணையதளத்தைப் பார்த்தோம். அதில் Mossad என்றே இருந்தது. அவ்வளவு பெரிய உளவு அமைப்பு எழுத்துப்பிழையுடன் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த புகைப்படம் தவறானது என்பது உறுதியாகிறது.
மொசாட் தலைமை அலுவலகம் தகர்க்கப்பட்டதாக செய்தி ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மொசாட் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த செய்தி மட்டுமே கிடைத்தது.
மொசாட் தலைமை அலுவலக கட்டிடத்தின் புகைப்படத்துடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒத்துப்போகிறதா என்று அறிய ஆய்வு செய்தோம். மொசாட் அலுவலகத்தின் புகைப்படம் நமக்குக் கிடைக்கவில்லை. மிகவும் பாதுகாப்பாக அந்த பகுதி இருப்பதால் மொசாட் அலுவலக புகைப்படம் கூட செய்தி ஊடகங்களில் வெளியாகவில்லை. அதன் கூகுள் மேப் புகைப்படத்தை மட்டுமே வைத்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது.
சிலர் சமூக ஊடகங்களில் ரகசியமாக எடுக்கப்பட்டது என்று மொசாட் தலைமை அலுவலகத்தின் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். கூகுள் மேப் புகைப்படத்துடன் அவை ஒத்துப்போயின. ஆனால், அந்த புகைப்படத்திற்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கும் தொடர்பில்லை. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தலைமை அலுவலகம் தகர்க்கப்பட்டது என்று பரவும் தகவல் மற்றும் புகைப்படம் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மொசாட் கட்டிடம் தாக்கப்பட்டது என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
