பாகிஸ்தானின் காஸ்னவி ஏவுகணை 14வது முறையாக தற்கொலை செய்துகொண்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

ராக்கெட் ஒன்று புறப்பட்டு மேலே செல்லத் தடுமாறி, சரிந்து பூமியில் விழுந்து வெடிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், "பாகிஸ்தானின் GHASNAVI ஏவுகணை 14 முறையாக 36 KM சென்று தற்கொலை செய்து கொண்டது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை Subashini Sivakumar என்பவர் 2020 ஜனவரி 26 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவைப் பார்க்கும்போது இது ஏவுகணைப் போல இல்லை. பூஸ்டர்கள், மொபைல் டவர் என எல்லாம் பார்க்க ராக்கெட் ஏவுதளம் போலவும், ராக்கெட் போலவும் உள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் தன்னிடம் உள்ள காஸ்னவி (Ghaznavi missile) ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதற்குள்ளாக பாகிஸ்தானின் காஸ்னவி ஏவுகணை சோதனை தோல்வி என்ற வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் வேகமாக பரவி வருகின்றன.

முதலில் இந்த வீடியோவில் இருப்பது காஸ்னவி ஏவுகணைதானா என்பதை அறிய, அதன் படத்தை தேடினோம். காஸ்னவி ஏவுகணைகள் தொடர்பான பல படங்கள் நமக்கு கிடைத்தன. அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தோம். வீடியோவில் உள்ளது போன்று, சுமையை சுமந்து செல்லும் தலை பகுதி ஏவுகணையில் இல்லை. அது ஏவுகணைகளுக்கே உரிய முறையில் கூர்மையாக இருந்தது.

universalnewstimeline.comArchived Link

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள ராக்கெட்டின் கீழ்ப் பகுதியில் சிறிய பூஸ்டர் ராக்கெட்கள் சுற்றிலும் உள்ளன. ஆனால், ஏவுகணைப் படத்தில் அது இல்லை.

காஸ்னவி ஏவுகணையை செலுத்தும்போது அதைச் சுற்றி மொபைல் டவர்கள் இருக்கவில்லை. ஆனால், ஃபேஸ்புக் வீடியோவில் ஒரு ராக்கெட் செலுத்து தளம் போன்று காட்சி அளிக்கிறது. இவை எல்லாம் இந்த வீடியோ காஸ்னவி ஏவுகணை இல்லை என்பதை உறுதி செய்தன.

இந்த வீடியோ உண்மையில் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை படமாக மாற்றி அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அது ரஷ்யாவின் ப்ரோட்டான் எம் ராக்கெட் என்று ஒரு தகவல் கிடைத்தது. அந்த வீடியோவை 2019ம் ஆண்டு ஜனவரியில் பதிவேற்றம் செய்திருந்தனர். ஆனால், இந்த ராக்கெட் வெடித்த சம்பவம் எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை.

gzt.comArchived Link

எனவே, ரஷ்யாவின் ப்ரோட்டான் எம் ராக்கெட் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவிலிருந்த வீடியோ தொடர்பான செய்தி நமக்கு கிடைத்தது. இந்த வீடியோவை 2013 ஜூலை 2ம் தேதி வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து தேடியபோது, அதற்கு முந்தைய நாள் நாசா ஸ்பேஸ் பிளைட் என்ற இணையதளம் வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது. அதில், ஜூலை 1ம் தேதி இந்த ராக்கெட் செலுத்தப்பட்டதாகவும், புறப்பட்ட சில விநாடிகளில் ராக்கெட் தரையில் விழுந்து வெடித்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

nasaspaceflight.comArchived Link

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ (factcrescendo.com) இந்தி பிரிவு கூட இது தொடர்பாக ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டதும் தெரியவந்தது.

நம்முடைய ஆய்வில்.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவில் உள்ளது பாகிஸ்தானின் காஸ்னவி ஏவுகணை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது ரஷ்யா செலுத்திய ப்ரோட்டான் எம் ராக்கெட் வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு ரஷ்யா செலுத்திய ராக்கெட் வீடியோவை எடுத்து, பாகிஸ்தானின் காஸ்னவி ஏவுகணை சோதனை தோல்வி என்று விஷமத்தனமான கருத்தைச் சேர்த்து வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பாகிஸ்தான் ஏவுகணை வெடித்துச் சிதறியதாக பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False