தி.மு.க வெற்றி பெற்றால் தைப்பூச திருநாள் அரசு விடுமுறை ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "திமுக வெற்றி பெற்றால் தைப்பூசத் திருநாள் விடுமுறை ரத்து செய்யப்படும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்" என்று உள்ளது.

நிலைத் தகவலில், “முருக பக்தர்கள் அனைவரும் "திமுகவிற்கு வாக்கு போட மாட்டோம்" என்று தை பூசத்தன்று முருகன்கோவிலில் சபதம் ஏற்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நியூஸ் கார்டை அர்த்தமுள்ள ஹிந்து மதம்.. என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Prabu Iyer என்பவர் 2021 ஜனவரி 6ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தைப்பூச திருநாளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற பல ஆண்டுகள் கோரிக்கை தற்போதுதான் நிறைவேறி உள்ளது. இந்த ஆண்டு முதல் தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த சூழலில் தி.மு.க வெற்றி பெற்றதும் தைப்பூசத் திருநாள் விடுமுறை ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறியதாக சமூக ஊடகங்களில் இந்த படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதை ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

இந்து மதம் பற்றி மு.க.ஸ்டாலின் தவறாக பேசினார் என்று தொடர்ந்து பல தவறான பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியாகி உள்ளது.

இந்த நியூஸ் கார்டு பார்க்க புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு போல இல்லை; வித்தியாசமாக உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஸ்டாலின் இப்படி கூறியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாக மாறியிருக்கும். ஆனால், ஒரு செய்தி கூட நமக்கு கிடைக்கவில்லை.

புதிய தலைமுறை இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அதன் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களை ஆய்வு செய்தோம். ஜனவரி 5, 2021 தேதி புதிய தலைமுறை வெளியிட்ட பதிவுகளை பார்த்த போது ஸ்டாலின் தொடர்பான பதிவு இல்லை.

எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது இது போலியானது, புதிய தலைமுறை வெளியிட்டது இல்லை என்று உறுதி செய்தார்.

இதன் அடிப்படையில், திமுக வெற்றி பெற்றால் தைப்பூச திருவிழா அரசு விடுமுறை ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களுடன் குறிப்பிட்ட நியூஸ் கார்டு தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தைப்பூசம் விடுமுறையை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False