
ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து வணக்கம் செலுத்துவதை பிரதமர் மோடி ரசித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்துவது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மண்டியிடும் தலை. தமிழன் தலைகுனிவதைக் கண்டு ரசிக்கும் சங்கி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Kanniappan Elangovan என்பவர் 2021 ஏப்ரல் 4ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியின் முன்பு உடலை வளைத்து வணக்கம் செல்வது போலவும், அதை பிரதமர் மோடி ரசிப்பது போலவும் படம் பகிரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிரதமர் மோடி அதானியின் மனைவிக்கு உடலை வளைத்து வணக்கம் செலுத்தியதாக வதந்திகள் பரப்பப்பட்டன.
அதே போல், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் உடலை வளைத்து வணக்கம் சொன்னதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. இதில், ஓ.பன்னீர்செல்வம் வணக்கம் செலுத்துவதாக இருந்தது. இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, பிரதமர் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் இந்த அளவுக்கு உடலை வளைத்து வணக்கம் செலுத்தியதாக படங்கள் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது டெல்லி சென்று மோடியை சந்தித்த படங்கள் கிடைத்தன.
அந்த படத்தில் மோடி கழுத்தில் துண்டு போர்த்தியபடி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ளது போல இருக்கிறார். ஆனால், அந்த படத்தில் ஓ.பன்னீர் செல்வம் தாடியுடன் உள்ளார். அதன் பிறகு மோடியை சந்தித்த படங்களில் ஓ.பன்னீர் செல்வம் தாடி இன்றி, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ளது போல இருக்கிறார். ஆனால், அந்த படங்களில் மோடியின் உடை ஒத்துப் போகவில்லை. எனவே, இந்த புகைப்படம் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தது.
அடுத்ததாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரதமர் மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்த புகைப்படங்கள் கிடைத்தன. அதில், ஓ.பன்னீர்செல்வம் முகச்சவரம் செய்திருந்தார். ஆனால், மோடியின் ஆடையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படமும் ஒத்துப்போகவில்லை.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive 1 I thenewsminute.com I Archive 2
அதன் பிறகு அ.தி.மு.க-வுடன் தன்னுடைய அணியை இணைப்பதற்கு முன்பு பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்த படம் கிடைத்தது. அதிலும் பிரதமரின் ஆடை உள்ளிட்ட விஷயங்கள் ஒத்துப்போகவில்லை.
துணை முதல்வராக ஆன பிறகு பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற மேல் கோட் அணிந்துள்ளார். இந்த புகைப்படமும் ஒத்துப்போகவில்லை. இதன் மூலம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது எடுத்த படத்தில்தான் போட்டோஷாப் செய்திருக்கிறார்கள் என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: livemint.com I Archive
அந்த உடல் வளைத்து வணக்கம் சொல்லும் படம் எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய ஆய்வு செய்தோம். தொடர்ந்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் ஆய்வு செய்தபோது, அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து வணக்கம் செலுத்தும் புகைப்படம் செய்தி ஊடகங்களில் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அந்த படத்தை பிரதமர் உடன் இருக்கும் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது அப்படியே பொருந்தியது. எனவே, இந்த படத்தை எடுத்துத்தான் மோடி படத்துடன் சேர்த்து போட்டோ எடிட் செய்திருக்கிறார்கள் என்பது உறுதியானது.

இந்த ஆதாரம் அடிப்படையில் பிரதமர் மோடிக்கு துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து வணக்கம் சொன்னார் என்று பரவும் படம் எடிட் செய்யப்பட்டது, போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வணக்கம் செல்லும் படம் எடிட் செய்யப்பட்டது, போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி?- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு
Fact Check By: Chendur PandianResult: Altered

தவருக்கு மன்னிக்கவும்..