இந்து மதத்தை எதிர்த்து கொல்கத்தாவில் ஒன்று கூடிய இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

இந்து மதத்தை எதிர்த்து கொல்கத்தாவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று ஒரு தரப்பினரும், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் முகமது நபி பற்றி அவதூறாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கொல்கத்தாவில் நடந்த ஆர்ப்பாட்டம் என்று மற்றொரு தரப்பினரும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜகவை எதிர்த்து இந்து மதத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டம் இதுல பாதி பெயர் இந்தியாவை சேர்ந்தவர்கள் கிடையாது. உலக அளவில் இந்தியாவை தலை நிமிர வைத்த என் தலைவன் சட்டத் திருத்தங்களை மாற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும் இது தெரியாமல் என் தலைவன் இருப்பாரா. சிறிது காலங்கள் காத்திருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Rameshkaalam Ramesh Kaalam என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 14ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இதே வீடியோவை AS-Seyyed Ashar Goush Moulana என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 11ம் தேதி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருந்த நிலைத் தகவலில், “நபி ﷺ அவர்களை அவமதிப்பு செய்ததற்காக மேற்குவங்க தலைநகரம் கொல்கத்தாவில் அலைகடலென..! திரண்ட இஸ்லாமிய மக்கள் வெள்ளம் யா ரஸூலல்லாஹ் என்ற கோஷங்களுடன் ஆரம்பித்தது” என்று குறிப்பிட்டிருந்தார். இரு தரப்பினரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டத்தை இந்துக்களுக்கு எதிரான போராட்டம் என்று விஷமத்தனமாக வீடியோ பகிரப்பட்டு வருகிறது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் முகமது நபி பற்றி தவறாக பேசியதை அக்கட்சியே ஒப்புக்கொண்டு, அவர்களை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை எதன் அடிப்படையில் இந்து மதத்துக்கு எதிரானது என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. 

கொல்கத்தாவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த போராட்டம் கொல்கத்தாவில் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோக்கள் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: YouTube I 24newshd.tv I Archive

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களுக்கு எதிரான போராட்டம் 2022 ஜூன் முதல் வாரத்தில் தொடங்கியது. அப்படி இருக்கும் போது 2021ல் இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் இது பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர்களுக்கு எதிரான போராட்டம் இல்லை என்பது உறுதியானது. 2021ல் பதிவிடப்பட்டிருந்த யூடியூப் வீடியோவில் இது பாகிஸ்தானில் உள்ள லாகூரில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Tehreek-e-Labbaik Pakistan என்ற பாகிஸ்தானைச் சார்ந்த கட்சி சார்பில் நடந்த மதம் சார்ந்த அனுசரிப்பு (chehlum) என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் கூகுளில் தேடிய போது கடந்த 2021ம் ஆண்டு கராச்சியில் Tehreek-e-Labbaik Pakistan சார்பில் மிகப்பெரிய கூட்டம் நடத்தப்பட்டது என்று செய்திகள், வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. இதன் மூலம் இந்துக்களுக்கு எதிராக அல்லது பா.ஜ.க-வுக்கு எதிராக இந்த கூட்டம் நடக்கவில்லை என்பதும் உறுதியானது.

வீடியோவில் மெட்ரோ ரயில் ஒன்று செல்வதைக் காணலாம். கொல்கத்தா மெட்ரோ இப்படி இருக்காது. பழைய மெட்ரோ ரயில் பெட்டிகள் வித்தியாசமாக இருக்கும். புதிய மெட்ரோ ஊதா நிறத்தில் இருக்கும். லாகூர் மெட்ரோ ரயில் பெட்டி எப்படி இருக்கும் என்று பார்த்தோம். லாகூர் மெட்ரோ ரயில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் படங்கள், வீடியோக்கள் கிடைத்தன. இவை எல்லாம் இந்த வீடியோ இந்தியாவில், கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் தவறானது என்று உறுதியானது.

முடிவு:

பாகிஸ்தானில் 2021ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களுக்கு எதிராக கொல்கத்தாவில் திரண்ட முஸ்லிம்கள் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்து மதத்தை எதிர்த்து கொல்கத்தாவில் ஒன்று கூடிய இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply