போராட்டக்காரர்கள் கழுத்தில் மிதித்த போலீஸ் அதிகாரி!- வைரல் படம் உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லி ஜாமியா போராட்டத்தில் கலந்துகொண்டவர் கழுத்தில் போலீஸ் அதிகாரி மிதிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

POLICE 2.png
Facebook LinkArchived Link

காவல் துறை அதிகாரி ஒருவர் போராட்டக்காரர் கழுத்தில் மிதிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்த படம் ஜாமியா போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்று நிலைத் தகவலில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அதில், “இந்த ஆண்டின் சிறந்த காவலர், ஏன்டா டேய் இரக்கமில்லையா உனக்கு  #JamiaProtest, #BJPburningDelhi” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Yasin Basha என்பவர் 2019 டிசம்பர் 15ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம் என்று தொடர்ந்து பல பழைய படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த வகையில் காவல் துறை அதிகாரி ஒருவர் போராட்டக்காரர் கழுத்தில் மிதிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். ஜாமியா போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளதால் உண்மையில் இந்த புகைப்படம் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழக போராட்டத்தின்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

அதிகாரிகளைப் பார்க்கும்போது டெல்லி காவல்துறை அதிகாரிகள் போல இல்லை. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2016ம் ஆண்டு இந்த படத்தை பல பாகிஸ்தான் ஊடகங்கள் பயன்படுத்தியது தெரியவந்தது.

POLICE 3.png
Search Link

சில பதிவுகள் 2013ம் ஆண்டு டெல்லி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தின்போது டெல்லி இந்தியா கேட் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் நடத்திய தாக்குதல் என்று பதிவிட்டிருந்தனர்.

இப்படி பலரும் பல விதங்களில் இந்த படத்தை பதிவிட்டு வந்ததால் உண்மையில் இந்த படம் எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. தொடர்ந்து தேடியபோது, இந்த படம் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி கிடைத்தது. அதில், சமாஜ்வாடி கட்சி நிர்வாகியை போலீஸ் டி.ஐ.ஜி தாக்கூர் என்பவர் தாக்கி, தரையில் தரதரவென இழுத்துச் சென்றார் என்று குறிப்பிட்டிருந்தனர். அதில் 2011ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அதில் catchnews.com என்ற இணையதளத்தில் வெளியான செய்தி இணைப்பையும் அளித்திருந்தனர். ஆனால், அந்த செய்தி எப்போது வெளியானது என்று தெரியவில்லை. கடைசியாக 2017 பிப்ரவரி 12ம் தேதி அப்டேட் செய்யப்பட்டது என்றே குறிப்பிட்டிருந்தனர். 

POLICE 4.png
catchnews.comArchived Link

அதிலும் லக்னோவில் போலீஸ் டிஐடி டி.கே.தாக்கூரால் Anand Bhadauria என்பவர் கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து டி.ஐ.ஜி தாக்கூருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது என்று குறிப்பிட்டிருந்தனர். 

தாக்கூர் என்ற பெயரில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியாற்றுகிறார்களா என்று தேடினோம். அப்போது D.k Thakur IPS என்ற ஃபேஸ்புக் ஐடி நமக்கு கிடைத்தது. அதில் உள்ள படமும், இந்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள போலீஸ் அதிகாரி படமும் ஒன்றாக இருப்பது தெரிந்தது. இதன் அடிப்படையில், இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்ததாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்தோம்.

POLICE 5.png

நம்முடைய ஆய்வில், போலீஸ் அதிகாரி ஒருவரை மிதிக்கும் படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

2011ம் ஆண்டு இந்த படம் எடுக்கப்பட்டதாக செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழக தாக்குதல் சம்பவத்தின்போது இந்த படம் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:போராட்டக்காரர்கள் கழுத்தில் மிதித்த போலீஸ் அதிகாரி!- வைரல் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False